புதிய பஸ் நிலைய பணிகள் ஒரு வாரத்துக்குள் நிறைவு பெறும்
வேலூர் புதிய பஸ்நிலைய பணிகள் அனைத்தும் ஒருவாரத்துக்குள் நிறைவு பெறும் என்று கலெக்டர் குமாரவேல்பாண்டியன் கூறினார்.
வேலூர்
வேலூர் புதிய பஸ்நிலைய பணிகள் அனைத்தும் ஒருவாரத்துக்குள் நிறைவு பெறும் என்று கலெக்டர் குமாரவேல்பாண்டியன் கூறினார்.
வேலூர் புதிய பஸ்நிலையம்
வேலூர் புதிய பஸ்நிலையம் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.46 கோடி மதிப்பில் நவீன வசதிகளுடன் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. இங்கு வணிக வளாகம், ஆண், பெண், மாற்றுத்திறனாளிகளுக்கு கழிப்பறை வசதி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், தானியங்கி வசதி, பயணிகள் காத்திருப்பு அறை, ஓய்வறை, மோட்டார் சைக்கிள் நிறுத்துமிடம் (பார்க்கிங்), புறக்காவல் நிலையம், கண்காணிப்பு கேமராக்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வேலூர் புதிய பஸ்நிலையத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 20 அல்லது 21-ந் தேதி நேரில் திறந்து வைக்க உள்ளார். அதன்காரணமாக அனைத்து பணிகளும் முடுக்கி விடப்பட்டு, முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் புதிய பஸ்நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை வேலூர் கலெக்டர் குமாரவேல்பாண்டியன், டி.எம்.கதிர்ஆனந்த் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஏ.பி.நந்தகுமார், ப.கார்த்திகேயன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது பஸ்நிலையத்தில் முடிவுற்ற பணிகள் மற்றும் நடைபெற்று வரும் பணிகளின் நிலை குறித்து மாநகராட்சி அதிகாரிகள், ஒப்பந்ததாரரிடம் கலெக்டர், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கேட்டறிந்தனர். பின்னர் பஸ்நிலையத்தின் அனைத்து பணிகளையும் தரமாக விரைந்து முடிக்கும்படி அறிவுறுத்தினர்.
ஒருவாரத்துக்குள் நிறைவு பெறும்
ஆய்வுக்கு பின்னர் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் நிருபர்களிடம் கூறுகையில், புதிய பஸ்நிலையத்தில் 90 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. மீதமுள்ள அனைத்து பணிகளும் ஒருவாரத்துக்குள் நிறைவு பெறும். பஸ்நிலையத்தில் மின்விளக்குகள், வளைவுகள், பயணிகள் அமரும் இருக்கைகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
புதிய பஸ்நிலையத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். வேலூர் மாவட்டத்துக்கு முதல்-அமைச்சர் வருகையையொட்டி செய்யப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகள், விழாவில் முதல்-அமைச்சர் வழங்கும் நலத்திட்ட உதவிகள் குறித்து விரைவில் தெரிவிக்கப்படும் என்று கூறினார்.
ஆய்வின்போது வேலூர் உதவி கலெக்டர் பூங்கொடி, மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார், உதவி கமிஷனர் பிரபுகுமார் ஜோசப், என்ஜினீயர் ரவிச்சந்திரன், செயற்பொறியாளர் கண்ணன் மற்றும் பலர் உடனிருந்தனர்.