21 நெசவாளர்களுக்கு மானியத்துடன் வீடு கட்டுவதற்கான பணி ஆணை
21 நெசவாளர்களுக்கு மானியத்துடன் வீடு கட்டுவதற்கான பணி ஆணை
நாகர்கோவில்:
குமரி மாவட்ட கைத்தறித்துறை நாகர்கோவில் சரகம் சார்பில் கைத்தறி நெசவாளர்களுக்கு மானியத்துடன் கூடிய வீடு கட்டுவதற்கான பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். மாநகர மேயர் மகேஷ் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவை துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டு கைத்தறி நெசவாளர்களுக்கு வீடு கட்ட மானியத்தொகை வழங்குவதற்கான பணி ஆணையை வழங்கி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
மு.க.ஸ்டாலின் தலைமையினால் அரசு பொறுப்பு ஏற்ற பிறகு கடந்த 10 ஆண்டு காலக்கட்டத்தில் முடக்கி வைக்கப்பட்ட திட்டங்களை நிறைவேற்றியதோடு, பல்வேறு புதிய திட்டங்களும் அறிமுகப்படுத்தப்பட்டு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. குமரி மாவட்டத்தை பொறுத்தவரையில் தி.மு.க. அரசு பொறுப்பு ஏற்ற 2 ஆண்டுகளில் விவசாயிகள், ஏழை, எளிய மக்கள் குறிப்பாக மலைவாழ் மக்களுக்கு இலவச பட்டா வழங்கப்பட்டுள்ளது.
மேலும் குடும்ப அட்டை பெறாத கடைக்கோடி கிராம மக்களுக்கும் குடும்ப அட்டை வழங்கப்பட்டுள்ளது. அந்தவகையில் கைத்தறி நெசவாளர்களின் வறுமையினை தெரிந்து கொண்ட தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், நெசவாளர்களுக்கென பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்க ஆணைப்பிறப்பித்து செயல்படுத்தி வருகிறார்கள்.
அதன்படி முதற்கட்டமாக நாகர்கோவில் மாநகராட்சி, குழித்துறை மற்றும் குளச்சல் நகராட்சியை சேர்ந்த 21 கைத்தறி நெசவாளர்களுக்கு ரூ.4 லட்சம் மானியத்துடன் கூடிய வீடுகட்டும் திட்டத்தின் கீழ் பயனாளி ஒருவருக்கு தலா ரூ.4 லட்சம் வீதம் 21 பயனாளிகளுக்கு ரூ.84 லட்சம் மதிப்பில் பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் கைத்தறித்துறை உதவி இயக்குனர் சங்கரேஸ்வரி, கைத்தறி அலுவலர் கவிதா, கைத்தறி ஆய்வாளர் தங்கசாமி மற்றும் நெசவாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.