"சாலை விபத்துகளை தடுக்க ஒன்றிணைந்து செயல்படுங்கள்"


சாலை விபத்துகளை தடுக்க ஒன்றிணைந்து செயல்படுங்கள்
x
தினத்தந்தி 7 Jun 2023 12:15 AM IST (Updated: 7 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சாலை விபத்துகளை தடுக்க அனைத்து துறை அலுவலர்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று கடலூர் ஆய்வுக்கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு உத்தரவிட்டார்.

கடலூர்

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை பாதுகாப்பு குறித்த ஆய்வுக்கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் வரவேற்றார். கூட்டத்துக்கு அரசு கூடுதல் தலைமைச்செயலாளர் பிரதீப்யாதவ் தலைமை தாங்கினார். சாலை பாதுகாப்பு குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் கலந்து கொண்டு பேசினார்.

கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கையேடுகள் மற்றும் சான்றிதழ் வழங்கி பேசினார். அமைச்சர்கள் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், சி.வெ.கணேசன் ஆகியோர் கலந்து கொண்டு சாலை விபத்துகளை குறைப்பது குறித்து பேசினர்.

கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது:-

விபத்தை தவிர்க்க முடியும்

சாலை விபத்துகளை குறைக்க அனைத்து துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். சாலையில் வெள்ளைக் கோடு தரமான பெயிண்டால் எழுத வேண்டும். தடுப்பு கட்டைகளும் தரமாக அமைக்க வேண்டும். நெடுஞ்சாலையில் வைக்கப்படும் ஒளிரும் விளக்குகளும் தரமாக வைக்க வேண்டும். வேகத்தடை உரிய அளவில் வைக்க வேண்டும். அப்போது தான் விபத்தை தவிர்க்க முடியும்.

நெடுஞ்சாலைத்துறை சார்பில் 305 பொறியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு வேகத்தடை எப்படி அமைக்க வேண்டும். பிளிங்டர் எப்படி இருக்க வேண்டும் போன்ற பல்வேறு பயிற்சிகளை அளித்துள்ளோம். தேவைப்பட்டால் கடலூர் மாவட்டத்திற்கும் பயிற்சி பெற்ற பொறியாளர்களை கேட்டு வாங்கி, அவர்களை பயன்படுத்துங்கள்.

ஹெல்மெட் கட்டாயம்

சாலைகளை கண்காணிக்கவும் தணிக்கைகுழு அமைத்து உள்ளோம். 53 பேருக்கு பயிற்சி அளித்து உள்ளோம். முறையாக பெயிண்ட் அடிக்கப்பட்டு உள்ளதா, தரமான சாலை அமைக்கப்பட்டு உள்ளதா என்று ஆய்வு செய்து வருகிறார்கள். காவல்துறை அதிகாரிகள் கவனத்திற்கு, செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டுகிறார்கள். அதற்கு நீங்கள் கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். மாவட்ட கலெக்டர் அலுவலகம், அரசு அலுவலகங்களுக்கு வருவோர் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று கட்டாயப்படுத்த வேண்டும். ஏற்கனவே ஒரு மாவட்டத்தில் கலெக்டர் இது பற்றி சுற்றறிக்கை அனுப்பி இருந்தார். அனுமதிக்கப்பட்ட, உரிமம் பெற்ற ஆட்டோக்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும்.

விழிப்புணர்வு

ஐ.ஏ.எஸ். படித்தாலும் காக்கி சட்டையை பார்த்தால் தான் பயம் ஏற்படுகிறது. ஆகவே காவல்துறையினர் சாலை பாதுகாப்பு குறித்து அதிகமாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பள்ளிகளிலும் மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்து எடுத்து கூற வேண்டும். வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் தான் ஓட்டுனர் உரிமம் கொடுக்கிறார்கள். நீங்கள் முறையாக சொல்லி கொடுத்தால் விபத்து ஏற்படாது. வாகனம் ஓட்ட தெரியாதவர்கள் கூட ஓட்டுனர் உரிமம் வைத்திருக்கிறார்கள். இது போன்ற நிலையை மாற்ற வேண்டும்.

நானே 2 முறை ஓட்டுனர் உரிமம் வாங்கும் போது, பெயில் ஆகி விட்டேன். அப்போது கடுமை இருந்தது. இப்போது இல்லை. பழைய வாகனங்களை ஓட்டினால் விபத்து ஏற்பட தான் செய்யும். விபத்துகளை தடுக்கும் வகையில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நலத்திட்ட உதவிகள்

முன்னதாக அமைச்சர்கள் எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சி.வெ.கணேசன் ஆகியோர் கலெக்டர் அலுவலகம் எதிரே தென்பெண்ணையாற்றின் கரையோரம் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். தொடர்ந்து கும்தாமேடு பாலம் அருகே தடுப்புச்சுவர் கட்டும் பணியையும் அமைச்சர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அதைத்தொடர்ந்து வருவாய்த்துறை சார்பில் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதி, சாலை விபத்து நிவாரண நிதி, முதியோர் மற்றும் இதர உதவித்தொகை திட்டம், இலவச வீட்டு மனைப்பட்டா, வேளாண்மை கருவிகள், கதிர் அடிக்கும் கருவி மற்றும் உழுவை எந்திரங்கள், தோட்டக்கலைத்துறை நலத்திட்ட உதவிகள், இலவச தையல் எந்திரம், சலவை பெட்டி, இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், நிதி உதவி, சுமை வாகனம் என 269 பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே 1 லட்சத்து 95 ஆயிரத்து 362-க்கான நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் வழங்கினர்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், எம்.எல்.ஏ.க்கள் அய்யப்பன், சபா. ராஜேந்திரன், சிந்தனைச்செல்வன், ராதாகிருஷ்ணன், மாநகராட்சி மேயர் சுந்தரிராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன், மாநகர தி.மு.க. செயலாளர் ராஜா, ஒன்றிய செயலாளர் விஜயசுந்தரம், மாநகர துணை செயலாளர் அகஸ்டின், பொதுக்குழு உறுப்பினர் பாலமுருகன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் பாலாஜி, கூட்டுறவு சங்க தலைவர் ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தலைமை பொறியாளர் சந்திரசேகர் நன்றி கூறினார்.


Next Story