கத்தியால் குத்திக்கொண்டு தொழிலாளி தற்கொலை முயற்சி
குடியாத்தம் அருகே தொழிலாளி கத்தியால் குத்திக்கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்தார்.
குடியாத்தத்தை அடுத்த கள்ளூர் எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 36). இவரது மனைவி காமாட்சி. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். விஜயகுமார் குடியாத்தம் அடுத்த பாக்கம் கிராமத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் மூட்டை தூக்கும் தொழிலாளியாக வேலாபார்த்து வருகிறார்.
விஜயகுமாருக்கும் அவரது மனைவி காமாட்சிக்கும் இடையே சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறு காரணமாக காமாட்சி கோபித்துக் கொண்டு திருவண்ணாமலையில் உள்ள அவரது தாய் வீட்டிற்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது.
இதனால் அப்பகுதியை சேர்ந்த சிலர் விஜயகுமார் செல்லும்போது கேலி கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த விஜயகுமார் நேற்று முன்தினம் இரவு கத்தியால் தனது வயிற்றில் குத்திக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக குடியாத்தம் டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொழிலாளி தனக்குத்தானே கத்தியால் குத்திக்கொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.