தொழிலாளி அடித்து கொலை
சங்கராபுரம் அருகே தொழிலாளியை அடித்து கொலை செய்த அவரது மகனை போலீசார் கைது செய்தனர்.
சங்கராபுரம்,
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே ராமராஜபுரம் கிராமத்தை சேர்ந்தவர் இப்ராஹிம் (வயது 65). தொழிலாளி. இவருடைய மகன் பாரூக் பாட்ஷா (வயது 37). திருமணம் ஆகவில்லை. இவருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. மேலும் வேலைக்கும் செல்லாமல் இருந்து வந்துள்ளார். இதனால் பாரூக் பாட்ஷாவுக்கு யாரும் பெண் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில் பாரூக்பாட்ஷா தனது தந்தையிடம் தனக்கு திருமணம் செய்து வைப்பதோடு, சொத்தையும் பிரித்து தருமாறு அடிக்கடி கேட்டு வந்துள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த பாரூக்பாட்ஷா தனது தந்தை என்றும் பாராமல் தடியால் இப்ராஹிம் தலையில் அடித்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
கைது
இருப்பினும் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்த தகவலின் பேரில் சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி தலைமையிலான போலீசார், இப்ராஹிம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இது குறித்த புகாரின் பேரில் பாரூக்பாட்ஷா மீது கொலை வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.