பாதாள சாக்கடை பணியில் மண்சரிந்து தொழிலாளி உயிரோடு புதைந்து சாவு
மதுரையில் பாதாள சாக்கடை பணியின் போது மண் சரிந்ததில் தொழிலாளி உயிரோடு புதைந்து பலியானார். 5 மணி நேரம் போராடி அவரது உடலை மீட்டனர்.
மதுரையில் பாதாள சாக்கடை பணியின் போது மண் சரிந்ததில் தொழிலாளி உயிரோடு புதைந்து பலியானார். 5 மணி நேரம் போராடி அவரது உடலை மீட்டனர்.
மண் சரிந்தது
மதுரை நகர் விரிவாக்கப்பகுதியில் பாதாள சாக்கடை, புதிய குடிநீர் இணைப்புக்கான பணிகள் நடந்து வருகின்றன. கூடல்புதூர் அசோக்நகர் 2-வது தெரு பகுதியிலும் இந்த பணிகள் நடைபெற்று வருகின்றன. இதை கோவை மாவட்டத்தை சேர்ந்த தனியார் நிறுவனம் செய்து வருகிறது.
நேற்று காலை ஈரோட்டைச் சேர்ந்த சக்திவேல் (வயது 35) உள்பட தொழிலாளர்கள் பலர், பாதாள சாக்கடைக்காக சாலையில் பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.எந்திரம் மூலம் பள்ளம் தோண்டிய போது அங்குள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் பீறிட்டதால் சாலையின் மேற்புறத்தில் இருந்த மண் திடீரென்று சரிந்து பள்ளத்தில் மொத்தமாக விழுந்தது. பள்ளத்தில் வேலை செய்து கொண்டிருந்த சக்திவேல் மீது விழுந்ததால், கண்இமைக்கும் நேரத்தில் அவர் உயிரோடு புதைந்தார்.
பரிதாப சாவு
விபரீதம் நடந்ததை அறிந்த சக தொழிலாளர்கள் அவரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் பள்ளத்தை மண்ணுடன், தண்ணீரும் சேர்ந்து மூடியதால் உடனடியாக மீட்க முடியவில்லை. மணலில் புதைந்த சக்திவேல் சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது உடலை மீட்கும் பணி நீண்டநேரம் நடந்தது. இது குறித்து தகவல் அறிந்ததும் மதுரை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் கூடல்புதூர் போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.
சுமார் 5 மணி நேரம் போராட்டத்துக்குப்பின் அவரது உடல் மீட்கப்பட்டது. பின்னர் போலீசார், சக்திவேலின் உடலை பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சோகம்
இறந்த சக்திவேலுக்கு ஜெகதா என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர். கடந்த 5 ஆண்டுகளாக, பாதாள சாக்கடைக்கு பள்ளம் தோண்டுவது சார்ந்த வேலையை சக்திவேல் பார்த்து வந்தார்.
மண் சரிந்து அவர் உயிரோடு புதைந்து பலியான சம்பவம் அந்த பகுதி மக்கள், சக தொழிலாளர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது