விஷம் தின்று தொழிலாளி தற்கொலை
விபத்தில் உறவினர்கள் இறந்த துக்கம் தாங்காமல் விஷம் தின்று தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
விபத்தில் உறவினர்கள் பலி
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே ஒட்டம்பட்டி பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 60). இவரது இளைய மகன் மணிகண்டன் (19). இவர்கள் 2 பேரும் அந்த பகுதியில் உள்ள தென்னந்தோப்பில் தேங்காய் உரிக்கும் தொழில் செய்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த 3 மாதத்திற்கு முன்பு மணிகண்டன் தனது மோட்டார் சைக்கிளில் தனது மாமா மகள் ரோஜா, சித்தி மங்கா ஆகியோரை பின்னால் அமர வைத்து அழைத்து சென்றார். அப்போது விபத்தில் சிக்கி ரோஜா, மங்கா ஆகியோர் இறந்து விட்டனர். இதன் காரணமாக மணிகண்டன் மனமுடைந்து காணப்பட்டார்.
மனக்கவலை
இதனால் கவலையை மறப்பதற்காக செல்வராஜ் தனது மகன் மணிகண்டனை கரூர் மாவட்டம் புகழூர் செம்படபாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியாருக்கு சொந்தமான தேங்காய் மண்டிக்கு தேங்காய் உரிக்கும் தொழிலுக்கு கூட்டி வந்துள்ளார்.
இங்கு கடந்த ஒரு மாதங்களாக 2 பேரும் தேங்காய் உரிக்கும் தொழில் செய்து வந்தனர். இருப்பினும் மணிகண்டன் ரோஜா, மங்கா விபத்தில் இறந்த துக்கத்தில் இருந்து மீளமுடியாமல் இருந்து வந்துள்ளார்.
தற்கொலை
இந்நிலையில் கடந்த 16-ந் தேதி இரவு மணிகண்டன் எலிமருந்தை தின்றதால் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை மணிகண்டன் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த தற்கொலை குறித்து செல்வராஜ் கொடுத்த புகாரின்பேரில், வேலாயுதம்பாளையம் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் நெப்போலியன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.