மனைவி பிரிந்து சென்றதால் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
மனைவி பிரிந்து சென்றதால் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
ஆரல்வாய்மொழி:
ஆரல்வாய்மொழி அருகே உள்ள அனந்தபத்மநாபபுரம் மேலத்தெருவை சேர்ந்தவர் முருகவேல் (வயது 45), தொழிலாளி. இவருக்கு பஞ்சுவர்ணம் என்ற மனைவியும், ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். மகளுக்கு திருமணம் முடிந்து வெளியூரில் உள்ளார். மகன் உறவினர் ஒருவரின் வீட்டில் வசித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பஞ்சுவர்ணம், முருகவேலை விட்டு பிரிந்து தனியாக வசித்து வருகிறார். இதையடுத்து, முருகவேலுக்கு மது குடிக்கும் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.மேலும், கடந்த சில நாட்களாக மனைவி பிரிந்து சென்றதை நினைத்து மனமுடைந்த நிலையில் காணப்பட்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் மதுவில் விஷம் கலந்து குடித்துவிட்டு வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்தார். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே முருகவேல் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.மனைவி பிரிந்து சென்ற ஏக்கத்தில் தொழிலாளி தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.