கோத்தகிரி அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
கோத்தகிரி அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீஸ் விசாரண மேற்கொண்டு வருகின்றனர்.
கோத்தகிரி
கோத்தகிரி அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீஸ் விசாரண மேற்கொண்டு வருகின்றனர்.
கூலித்தொழிலாளி
கோத்தகிரி அருகே உள்ள வள்ளுவர் காலனி கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி என்பவர் மகன் வேலுச்சாமி (வயது 50). கூலி தொழிலாளியான இவருக்கு கடந்த 27 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி, மனைவி மற்றும் ஒரு மகன், மகள் உள்ளனர். இவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில வருடங்களாக மனைவி இவரை விட்டு பிரிந்து தனது மகளுடன் தனியே வாழ்ந்து வருகிறார். அவரது மகன் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
இதனால் வேலுச்சாமி தன்னை கவனிக்க யாரும் இல்லை என்கிற வருத்தத்தில் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.
விஷம் குடித்தார்
இந்தநிலையில் நேற்று முன்தினம் அம்புக்கல் பகுதியில் தனியாருக்கு சொந்தமான தேயிலைத் தோட்டத்திற்கு நடுவே உள்ள ஆளில்லாத வீட்டிற்கு சென்றார். அங்கிருந்து வேலுச்சாமி மது அருந்தியபோது விஷம் குடித்ததாக தெரிகிறது. இதனால் அவர் சிறிது நேரத்தில் இறந்துவிட்டார். இந்தநிலையில் நேற்று காலை அங்கு ேவலைக்கு சென்ற தொழிலாளர்கள், வேலுச்சாமி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அவர்கள் இதுபற்றி கோத்தகிரி போலீசருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு சென்று, அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.