மதுவில் விஷம் கலந்து குடித்து தொழிலாளி தற்கொலை
தொழிலாளி தற்கொலை
பவானியை அடுத்த மயிலம்பாடி ரங்கன் நகர் பகுதியில் நேற்றுக்காலை ஒருவர் இறந்து கிடந்தார். இதுபற்றி அறிந்ததும் பவானி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், 'அவர் அதே பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் (வயது 48) என்பதும், அவர் நெசவுத்தொழிலாளியாக வேலை செய்து வந்ததும்,' தெரியவந்தது. போலீசார் மேலும் நடத்திய விசாரணையில், 'இவர் பனியன் கழிவு துணிகளை எடுத்து வந்து மிதியடி தயாரித்து விற்பனை செய்து வந்து உள்ளார். அதுமட்டுமின்றி இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவிக்கு இடையே தகராறு இருந்து வந்ததாக தெரிகிறது. இதன்காரணமாக ராதாகிருஷ்ணன் மனமுடைந்து மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டதும்,' தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.