தீக்குளித்து தொழிலாளி தற்கொலை
தீக்குளித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
விருதுநகர் அருகே உள்ள ஆனைக்குட்டம் தெற்கு தெருவை சேர்ந்தவர் ரவி (வயது 55). இவரது மனைவி பாக்கியலட்சுமி (45). இருவரும் பட்டாசு தொழிலாளர்கள். இந்தநிலையில் ரவி தினசரி மது போதையில் பாக்கியலட்சுமியுடன் பிரச்சினை செய்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று காலை ரவி மது குடித்து விட்டு வந்து பாக்கியலட்சுமியிடம் தகராறு செய்தபோது பாக்கியலட்சுமி, ரவியை கண்டித்து விட்டு வீட்டுக்குள் சென்று விட்டார். இதையடுத்து திடீரென ரவியின் அலறல் சத்தம் கேட்டு பாக்கியலட்சுமி வீட்டிற்கு வெளியே வந்து பார்த்தபோது ரவியின் உடலில் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. அதிர்ச்சியடைந்த பாக்கியலட்சுமி, ரவியின் உடலில் தண்ணீரை விட்டு தீயை அணைக்க முயன்றதுடன் அவரிடம் விவரம் கேட்டபோது அவர் சமையலறையில் இருந்த மண் எண்ணெயை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டதாக தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து உறவினர்கள் உதவியுடன் அவரை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இதுபற்றி பாக்கியலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் ஆமத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.