தன் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாக தொழிலாளி புகார்; மனைவி மீது வழக்கு


தன் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாக தொழிலாளி புகார்; மனைவி மீது வழக்கு
x
தினத்தந்தி 26 April 2023 12:15 AM IST (Updated: 26 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சங்கரன்கோவிலில் தொழிலாளி தீக்காயத்துடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவர் தனது மனைவி தன் மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்ததாக பரபரப்பு புகார் தெரிவித்து உள்ளார்.

தென்காசி

சங்கரன்கோவில்:

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கர் நகர் 1-ம் தெருவை சேர்ந்தவர் முப்புடாதி மகன் அருணாச்சலம் (வயது 36). கூலி தொழிலாளி. இவருடைய மனைவி சங்கர ஆவுடையம்மாள். இவர்களுக்கு திருமணம் ஆகி 12 ஆண்டுகள் ஆகிறது. 2 குழந்தைகள் உள்ளனர். கணவன்-மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் அருணாச்சலம் தீக்காயத்துடன் சிகிச்சைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே, அருணாச்சலம் பேசும் ஒரு வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. அதில் அவர், தனது மனைவி சங்கர ஆவுடையம்மாள் தன் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாக பரபரப்பு புகார் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அருணாச்சலத்தின் அண்ணன் வடிவேல் சங்கரன்கோவில் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார், சங்கர ஆவுடையம்மாள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Next Story