வீட்டில் தவறி விழுந்து தொழிலாளி சாவு
வீட்டில் தவறி விழுந்து தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
ராஜாக்கமங்கலம்:
ராஜாக்கமங்கலம் அருகே கணபதிபுரம் ஆலங்கோடு புதூர் பகுதியை சேர்ந்தவர் வேல்சாமி (வயது 58), தொழிலாளி. இவருக்கு பூபதி என்ற மனைவியும், 3 மகள்கள் மற்றும் ஒரு மகனும் உள்ளனர். வேல்சாமி தினமும் மது குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இதனால் கடந்த 10 நாட்களுக்கு முன்பு அவரது மனைவி பூபதி கோபித்துக் கொண்டு உறவினர் வீட்டிற்கு சென்று விட்டார். இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு மதுபோதையில் வீட்டில் இருந்த வேல்சாமி தனது 2-வது மகளிடம் தகராறு செய்துள்ளார். மேலும் மகளை அடிப்பதற்காக கட்டையுடன் பாய்ந்து சென்ற போது மகள் அங்கிருந்து தப்பி ஓடி பக்கத்து வீட்டுக்கு சென்று ஒளிந்து கொண்டார்.
இந்தநிலையில் வேல்சாமியின் மகன் பள்ளிக்கூடம் சென்று விட்டு வீட்டுக்கு வந்தார். அங்கு காயமடைந்த நிலையில் வேல்சாமி அசைவற்று கிடந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டு சிகிச்சைக்காக ராஜாக்கமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து ராஜாக்கமங்கலம் போலீசார் வேல்சாமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், மதுபோதையில் வேல்சாமி படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து இறந்திருக்கலாம் என தெரியவந்தது. மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.