கிரேன் மோதி தொழிலாளி சாவு
மருவூரிலிருந்து திருக்காட்டுப்பள்ளி நோக்கி சென்று கொண்டிருந்த கிரேன் எந்திரம் மோதி தொழிலாளி உயிரிழந்தார்.
திருவையாறை அடுத்த கூத்தூர் அம்பேத்கர் புரத்தை சேர்ந்த பழனிசாமி (வயது45). கூலித்தொழிலாளியான இவர் வேலைக்கு சென்றுவிட்டு தனது மோட்டார் சைக்கிளில் சாத்தனூர் மெயின்ரோடு சத்திரம் அருகே நின்றுகொண்டிருந்தார். அப்போது மருவூரிலிருந்து திருக்காட்டுப்பள்ளி நோக்கி சென்று கொண்டிருந்த கிரேன் எந்திரம் எதிர்பாராதவிதமாக பழனிசாமி மீது மோதியது. இதில் உடல் நசுங்கி அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து பழனிசாமி மனைவி சித்ரா (38) மருவூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பழனிசாமி உடலை கைப்பற்றி திருவையாறு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும் கிரேன் எந்திர டிரைவரான அரியலூர் மாவட்டம் வரதராஜன்பேட்டை ஆரோக்கியபுரத்தை சேர்ந்த ராபர்ட் மகன் ராஜ்குமார் (35) என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.