அளவுக்கு அதிகமாக மது குடித்த தொழிலாளி சாவு
தொழிலாளி சாவு
பெருந்துறை சீனாபுரம் அருகே உள்ள கள்ளிப்பாளையத்தை சேர்ந்தவர் முருகேஷ் (வயது 42). இவர், பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள தோட்டத்தை, பராமரிக்கும் வேலையை செய்து வந்தார். இவருடைய மனைவி சவுந்திரபிரியா (31). இவர்களுக்கு தர்ணிகா (5) என்ற மகளும், தர்ணீஸ் (4) என்கிற மகனும் உள்ளனர்.
நேற்று முன்தினம் இவர் வேலை முடிந்து வீட்டுக்கு செல்லும் முன் அளவுக்கு அதிகமாக மது குடித்து உள்ளார். வீட்டுக்கு சென்ற அவர் அங்குள்ள படுக்கையில் படுத்து உள்ளார். நள்ளிரவில் படுக்கையில் இருந்த எழுந்த அவர் திடீரென மயங்கி விழுந்துவிட்டார். உடனே அவருடைய மனைவி சவுந்திரபிரியா, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் முருகேசை மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவமனையில் சேர்த்து உள்ளார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் முருகேஷ் நேற்று இறந்துவிட்டார். இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.