கிணற்றில் மூழ்கி தொழிலாளி சாவு
கிணற்றில் மூழ்கி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
சேலம் மாவட்டம், சங்ககிரியை சேர்ந்தவர் ஜீவா (வயது 31). இவர் கரூர் மாவட்டம் ஆண்டாங்கோவில் புதூர் பகுதியில் உள்ள தனியார் பஸ் பாடி கட்டுமான நிறுவனத்தில் தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார். நேற்று முன்தினம் மாலை வழக்கம் போல் வேலையை முடித்துவிட்டு நிறுவன வளாகத்தில் அமைந்துள்ள 50 அடி ஆழ கிணற்றில் கை, கால்களை கழுவுவதற்காக வாலியை போட்டு தண்ணீர் இரைத்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக கால் இடறி கிணற்றில் தவறி விழுந்துள்ளார். அந்த சமயத்தில் அருேக யாரும் இல்லாததாலும், நீச்சல் தெரியாத காரணத்தாலும் நீண்ட நேரம் தண்ணீரில் தத்தளித்தவர் பரிதாபமாக இறந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த கரூர் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் தீயணைப்பு வீரர்கள் கயிற்றை கட்டி கிணற்றுக்குள் இறங்கி ஜீவாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.