கிணற்றில் மூழ்கி தொழிலாளி சாவு
ஓட்டப்பிடாரம் அருகே கிணற்றில் மூழ்கி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
ஓட்டப்பிடாரம்:
ஓட்டப்பிடாரம் அருகே கிணற்றில் மூழ்கி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
தொழிலாளி
ஓட்டப்பிடாரம் அருகே உள்ள தொட்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் சங்கர். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். சாக்கு தைக்கும் தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது.
நேற்று முன்தினம் இரவு வெளியே சென்ற அவர் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து உறவினர்கள் அக்கம் பக்கத்தில் தேடி பார்த்தனர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த நிலையில் நேற்று தொட்டம்பட்டி கிராமத்தில் இருந்து ஆத்திக்கிணறு கிராமத்திற்கு செல்லும் சாலை ஓரத்தில் அமைந்துள்ள தனியாருக்கு சொந்தமான கிணற்றில் ஆண் பிணம் கிடப்பதாக பசுவந்தனை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சுதேசன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.
கிணற்றில் மூழ்கி சாவு
பின்னர் நடத்திய விசாரணையில், இறந்து கிடந்தது சாக்கு தொழிலாளி சங்கர் என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் தீயணைப்பு துறையினர் உதவியுடன் அவரது உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அவர் அதிக மது போதையில் நிலைதடுமாறி கிணற்றில் விழுந்து தண்ணீரில் மூழ்கி உயிரிழந்து இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.