பாலத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு
பாலத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார்
திருமங்கலம்,
திருமங்கலம் அருகே உள்ள கள்ளிக்குடி, சோளம்பட்டி பகுதியை சேர்ந்தவர் லட்சுமண பெருமாள் (வயது 52). இவருடைய மனைவி பாண்டீஸ்வரி. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். லட்சுமண பெருமாள் வெளியூரில் ஓட்டலில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இந்நிலையில் கடந்த சிலநாட்களுக்கு முன்பு பொங்கல் பண்டிகைக்காக ஊருக்கு வந்துள்ளார். சம்பவத்தன்று அவர் சோளம்பட்டி பகுதியில் உள்ள பாலத்தில் படுத்திருந்ததாக கூறப்படுகிறது. அப்போது லட்சுமண பெருமாள் திடீரென நிலை தடுமாறி பாலத்தில் இருந்து தவறி கீழே விழுந்தார். அதில் படுகாயம் அடைந்த அவரை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி லட்சுமண பெருமாள் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து அவரது மனைவி பாண்டீஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.