பிரம்மதேசம் அருகேகல்குவாரி பள்ளத்தில் தவறி விழுந்த தொழிலாளி பலி
பிரம்மதேசம் அருகே கல்குவாரி பள்ளத்தில் தவறி விழுந்த தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
பிரம்மதேசம்,
கூலி தொழிலாளி
ஈரோடு மாவட்டம் கோபி செட்டிப்பாளையம் பெரிய கொடிவேரி ஆசிரியர் நகரை சேர்ந்தவர் இருதய புஷ்பராஜ் மகன் ஜோயல் அந்தோணி ஆரோக்கியராஜ்(வயது 38). கூலி தொழிலாளியான இவர் விழுப்புரம் மாவட்டம் பிரம்மதேசம் அடுத்த வடகொளப்பாக்கம் கிராமத்தில் இயங்கி வரும் கல்குவாரியில் கல் உடைக்கும் வேலை பார்த்து வந்தார். நேற்று காலை ஜோயல் அந்தோணி ஆரோக்கியராஜ் கல்குவாரியில் 110 அடி உயரத்தில் நின்றபடி வெடி வைத்து கற்களை தகர்க்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது அவர் திடீரென மேல் இருந்து தவறி தலைகுப்புற கல்குவாரி பள்ளத்துக்குள் விழுந்து விட்டார்.
போலீஸ் விசாரணை
இதில் பலத்த காயமடைந்த அவர், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்ததும் பிரம்மதேசம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஜோயல் அந்தோணி ஆரோக்கியராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் பிரம்மதேசம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.