கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி பலி


கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி பலி
x

கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி உயிரிழந்தார்.

திருச்சி

தா.பேட்டை:

புறா பிடிக்க சென்றனர்

முசிறி அருகே உள்ள ஆலமரத்துப்பட்டி பகுதியை சேர்ந்தவர்கள் ராஜா(வயது 39), ராஜேந்திரன்(23), சதீஷ்(21). இவர்கள் கரூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஜவுளி நிறுவனத்தில் கூலி தொழிலாளியாக வேலை செய்து வந்தனர்.

இந்தநிலையில் நேற்று விடுமுறை என்பதால் 3 பேரும் சேர்ந்து புறா பிடிப்பதற்காக தா.பேட்டை அருகே உள்ள பையித்தம்பாறை கிராமத்திற்கு வந்துள்ளனர். இந்திராநகர் காலனி பகுதியில் ஒரு மரத்தில் இருந்த புறாவை பிடிக்க சென்றபோது, அப்பகுதியில் உள்ள ராஜசேகரன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்து கிணற்றில் ராஜா தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கினார்.

பிணமாக மீட்பு

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த ராஜேந்திரன், சதீஷ் ஆகியோர் சத்தம் போட்டனர். இதையடுத்து அக்கம், பக்கத்தினர் அங்கு ஓடி வந்து, கிணற்றில் இறங்கி தேடி பார்த்தனர். ஆனால் ராஜா கிடைக்கவில்லை. இதனால் முசிறி தீயணைப்பு நிலையத்திற்கு அப்பகுதியினர் தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து வந்து கிணற்றுக்குள் இறங்கி தேடினர். இதில் ராஜாவை பிணமாக மீட்டு மேேல கொண்டு வந்தனர். இதையடுத்து ராஜாவின் உடலை தா.பேட்டை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இறந்த ராஜாவுக்கு திருமணமாகி மனைவி, ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. புறா பிடிக்க சென்றபோது தொழிலாளி கிணற்றில் தவறி விழுந்து இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story