மோட்டார் சைக்கிள் மீது பள்ளி வாகனம் மோதி தொழிலாளி பலி
மன்னார்குடி அருகே மோட்டார் சைக்கிள் மீது பள்ளி வாகனம் மோதி தொழிலாளி பலியானார். மேலும் இந்த விபத்தில் அவரது நண்பர் படுகாயம் அடைந்தார்.
மன்னார்குடி:
மன்னார்குடி அருகே மோட்டார் சைக்கிள் மீது பள்ளி வாகனம் மோதி தொழிலாளி பலியானார். மேலும் இந்த விபத்தில் அவரது நண்பர் படுகாயம் அடைந்தார்.
மோட்டார் சைக்கிள் மீது மோதியது
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் மதுக்கூர் சாலைப் பகுதியில் வசித்து வந்தவர் ஆறுமுகம் (வயது30).கூலி தொழிலாளி. இவர் நேற்று காலை தனது நண்பர் சதீஷ் (23) என்பவருடன் வேலைக்காக மன்னார்குடியில் இருந்து பேரையூர் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிளை ஆறுமுகம் ஓட்டிச் சென்றுள்ளார்.
மேலநாகை அருகே தெற்குநத்தம் சாலையில் சென்றபோது எதிரே மாணவர்களை ஏற்றி வந்த தனியார் பள்ளி பஸ் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
தொழிலாளி பலி
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். நண்பர் சதீஷ் படுகாயம் அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த மன்னார்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உயிரிழந்த ஆறுமுகம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கும், படுகாயம் அடைந்த சதீசை மீட்டு சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கும் அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பான புகாரின் பேரில் மன்னார்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து பள்ளி வேன் டிரைவர் மன்னார்குடியை சேர்ந்த ராஜ்(64) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சோகம்
மனைவி பிரிந்து சென்று விட்ட நிலையில் தனது 3 குழந்தைகளுடன் வாழ்ந்து வந்த ஆறுமுகம் உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.