மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி
மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழந்தார்
துவரங்குறிச்சி:
மின்சாரம் பாய்ந்து பலி
துவரங்குறிச்சியை அடுத்த அம்மாபட்டியை சேர்ந்தவர் லோகநாதன்(வயது 50). கூலித் தொழிலாளியான இவர் மஞ்சம்பட்டியில் உள்ள செந்தில் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் கூலி வேலை பார்த்து வந்தார். அந்த தோட்டத்தில் காட்டெருமைகள் அட்டகாசம் அதிகமாக இருந்ததால் மின்வேலி அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று தோட்டத்தில் லோகநாதன் வேலை செய்தபோது மின் கம்பத்தில் இருந்து மின் கம்பி ஒன்று திடீரென அறுந்து மின் வேலியில் விழுந்தது.
அப்போது லோகநாதன் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது பற்றி தகவல் அறிந்த துவரங்குறிச்சி போலீசார் அங்கு சென்று லோகநாதனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்தில் 4 பேர் படுகாயம்
*நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தை சேர்ந்த ஆனந்த்(32), ராஜன்(65), சேலத்தை சேர்ந்த இந்திராணி(60) ஆகியோர் சொந்த வேலையாக துறையூருக்கு வந்துவிட்டு ஒரு காரில் திரும்பிச் சென்றனர். குமாரபாளயத்தை சேர்ந்த பாலாஜி(29) காரை ஓட்டினார். முருங்கப்பட்டி முத்தையா நகர் பகுதியில் சென்றபோது எதிரே தம்மம்பட்டியில் இருந்து வந்த டிப்பர் லாரியும், காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. காரில் பயணம் செய்த 4 பேரும் பலத்த காயமடைந்து, சிகிச்சைக்காக துறையூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். லாரியை ஓட்டி வந்த மங்கப்பட்டிபுதூரை சேர்ந்த டிரைவர் கண்ணன்(50) மீது உப்பிலியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்தின் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
*காட்டுப்புத்தூர் அருகே உள்ள மேக்கல்நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் மணிகண்டன்(40). இவர், கோபித்து கொண்டு தாய் வீட்டிற்கு சென்ற தனது மனைவி தமிழரசியை சமாதானம் ெசய்து, வீட்டிற்கு கூட்டி வரச்சென்றார். அப்போது தமிழரசியின் தம்பியான பாலசுப்ரமணியன், மணிகண்டனை திட்டி தாக்கியதில் அவருக்கு காயம் ஏற்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்து காட்டுப்புத்தூர் போலீசார் வழக்குப்பதிந்து பாலசுப்பிரமணியனை கைது செய்தனர்.
பெண் தற்கொலை
*திருச்சி எடமலைப்பட்டிபுதூர் கொல்லங்குளம் பகுதியை சேர்ந்த திருப்பதியின் மனைவி மகாலட்சுமி (வயது 38). இவர்களுக்கு 3 ஆண் குழந்தைகள் உள்ளனர். சம்பவத்தன்று வீட்டில் சேலையால் மகாலட்சுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
*திருச்சி ஸ்ரீரங்கம் மருதாண்டகுறிச்சி பகுதியை சேர்ந்த மோகன் என்கிற மோகனசுந்தரத்தை(22) கடந்த மாதம் 17-ந்தேதி கோவில் திருவிழாவில் பக்தர்களிடம் பணம் திருடிய வழக்கில் சோமரசம்பேட்டை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் உத்தரவிட்டார்.
தொழிலாளி பலி
*சோமரசம்பேட்டை அருகே உள்ள வடக்கு அரியாவூர் தங்கம் நகரை சேர்ந்தவர் சுப்பிரமணி(70). விவசாய கூலிதொழிலாளியான இவர் நேற்று மது அருந்திவிட்டு அரியாவூர் தேசிய வாழை ஆராய்ச்சி மையம் அருகே சாலையை கடந்து சென்றபோது, நிலை தடுமாறி கீழே விழுந்தார். அப்போது அந்த வழியாக வந்த லாரி அவர் மீது ஏறி இறங்கியுள்ளதில், அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.