ஈரோட்டில் தொழிலாளி சாவு தனியார் மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகை
ஈரோட்டில் தவறான சிகிச்சை அளித்ததால் தொழிலாளி உயிரிழந்ததாக கூறி அவரது உறவினர்கள் தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.
ஈரோட்டில் தவறான சிகிச்சை அளித்ததால் தொழிலாளி உயிரிழந்ததாக கூறி அவரது உறவினர்கள் தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
தொழிலாளி
ஈரோடு காசிபாளையம் கே.ஏ.எஸ்.தியேட்டர் பகுதியை சேர்ந்தவர் சண்முகம் (வயது 45). சலவை தொழிலாளி. இவருடைய மனைவி கோமதி. இவர்களுக்கு குழந்தை இல்லை. சண்முகம் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தார். இதற்காக பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்தநிலையில் கடந்த மாதம் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு உள்ளது. இதற்காக ஈரோடு சம்பத் நகரில் உள்ள பரணி பாவேந்தர் பலதுறை மருத்துவமனையில் சிகிச்சைக்காக உறவினர்கள் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.
மேலும் அவருக்கு ரத்தம் குறைவாக இருப்பதால் இடது முழங்கையில் டாக்டர்கள் ஊசி போட்டுள்ளனர். அதன்பின்னர் 2 நாளில் ஊசி போட்ட இடத்தில் வீக்கம் ஏற்பட்டு உள்ளது. அதனைத்தொடர்ந்து அந்த இடத்தில் புண் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவருடைய இடது முழங்கையில் டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்தனர்.
முற்றுகை
இந்த நிலையில் நேற்று சண்முகம் திடீரென உயிரிழந்தார். இதனால் அவரின் உறவினர்கள் மருத்துவமனையின் முன்பு ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த வீரப்பன்சத்திரம் போலீசார் முற்றுகையிட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் போலீசாரிடம் கூறுகையில், 'நெஞ்சு வலி காரணமாகத்தான் சண்முகத்தை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தோம். அவருக்கு போடப்பட்ட ஊசியால் அவரின் இடதுகையில் புண் ஏற்பட்டது. அதற்காக மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சையால் அவர் உயிரிழந்துள்ளார். இதற்கு டாக்டர்களின் தவறான சிகிச்சையே காரணம்' என்றனர்.
பின்னர் நடந்த பேச்சுவார்த்தையின் முடிவில் சமரசம் ஏற்பட்டதை தொடர்ந்து சண்முகத்தின் உறவினர்கள் தங்களுடைய முற்றுகை போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதையொட்டி அசம்பாவித சம்பவம் ஏற்படாமல் இருக்க ஆஸ்பத்திரி பகுதியில் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டனர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.