கிணற்றில் மூழ்கி தொழிலாளி பலி
தேனி அருகே கிணற்றில் மூழ்கி தொழிலாளி பலியானார்.
தேனி அருகே வலையப்பட்டியை சேர்ந்த மாயன் மகன் கண்ணன் (வயது 35). கூலித்தொழிலாளி. அதே ஊரில் உள்ள வீருசின்னம்மாள் கோவில் திருவிழா நேற்று முன்தினம் மஞ்சள் நீராட்டு விழாவுடன் நிறைவு பெற்றது. அந்த நிகழ்ச்சியை தொடர்ந்து கண்ணன் உள்பட 6 பேர் அதே ஊரில் உள்ள ஒரு குளத்துக்கு குளிக்கச் சென்றனர். கண்ணனுக்கு நீச்சல் தெரியாது என்று கூறப்படுகிறது. இதனால், அவர் கிணற்றில் உள்ள படிக்கட்டில் அமர்ந்து குளித்துக் கொண்டு இருந்தார். எதிர்பாராத விதமாக அவர்கள் கிணற்றுக்குள் தவறி விழுந்தார். அதில் அவர் நீரில் மூழ்கினார். அங்கு குளித்துக் கொண்டு இருந்தவர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால், அவரை மீட்க முடியவில்லை. தகவல் அறிந்ததும் தீயணைப்பு படை வீரர்கள் அங்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். நீரில் மூழ்கிய கண்ணன் பிணமாக மீட்கப்பட்டார். அவருடைய உடலை பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.