ஆற்றில் தவறி விழுந்து தொழிலாளி பலி
ஒடுகத்தூர் அருகே ஆற்றில் தவறி விழுந்து தொழிலாளி உயிரிழந்தார்.
அணைக்கட்டு
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தாலுகா பரவக்கொட்டையை அடுத்த பூங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 32). இவர் கடந்த 15 வருடங்களாக வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூரை அடுத்த பாக்கம்பாளையம் பகுதியில் தங்கி கூலி வேலை செய்து வந்தார்.
குடிப்பழக்கத்திற்கு அடிமையான சீனிவாசன் நேற்று காலையிலேயே குடித்துவிட்டு அப்பகுதியில் உள்ள ஆற்றங்கரைக்கு சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் வீட்டுக்கு வராததால் சந்தேகம் அடைந்த அவரது குடும்பத்தினர் ஆற்றங்கரைக்கு சென்று பார்த்தனர்.
அப்போது அவர் ஆற்றில் ஓடும் தண்ணீரில் மூழ்கி இறந்தது தெரிய வந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த வேப்பங்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சீனிவாசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து சீனிவாசனின் அண்ணன் திருப்பதி கொடுத்த புகாரின்பேரில் வேப்பங்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.