தொழிலாளி தூக்குப்போட்டு சாவு
கழுகுமலையில் கடனை திருப்பிக் கேட்டு மிரட்டியதால் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கழுகுமலை,:
தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை அருகே உள்ள கரடிகுளம் சின்னகாலனி பகுதியை சேர்ந்தவர் கதிரவன் (வயது 36). கூலி தொழிலாளியான இவருக்கு பேச்சியம்மாள் (34) என்ற மனைவியும், துர்க்கா (12), கீர்த்தி (9), கீர்த்தனா (9) ஆகிய 3 மகள்களும் உள்ளனர்.
கதிரவன் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு கழுகுமலை ஆறுமுகம் நகரைச் சேர்ந்த நடராஜன் (60) என்பவரிடம் ரூ.5 ஆயிரம் வட்டிக்கு கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. பின்னர் கடந்த 2½ மாதத்திற்கு முன்பு கதிரவன் நடராஜனிடம் ரூ.7 ஆயிரம் கொடுத்து கணக்கை முடித்துள்ளார்.
தற்கொலை
எனினும் கடந்த 1-ந் தேதி மாலையில் நடராஜன் மீண்டும் கதிரவனிடம் தனக்கு தர வேண்டிய பணத்தை வட்டியுடன் சேர்த்து தரவேண்டும் என்று கொலை மிரட்டல் விடுத்து சென்றதாக கூறப்படுகிறது.
இதனால் மனவேதனை அடைந்த கதிரவன் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த கழுகுமலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். கதிரவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் கந்துவட்டி கேட்டு மிரட்டியதால் தான் தனது கணவர் தற்கொலை செய்து கொண்டதாக கதிரவனின் மனைவி பேச்சியம்மாள் கழுகுமலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
கைது
அதன்பேரில், கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேஷ் விசாரணை நடத்தினார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து நடராஜனை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.
நடராஜன் ஏற்கனவே கொலை வழக்கில் பாளையங்கோட்டை சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக இருந்து வருகிறார். தற்போது பரோலில் வெளியே வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.