தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை- மனைவி, மைத்துனரை கைது உறவினர்கள் மறியல்
தச்சம்பட்டு அருகே மனைவி, மைத்துனர் அவதூறாக திட்டி மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கியதால் அவமானம் தாங்காமல் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். உறவினர்கள் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வாணாபுரம்
தச்சம்பட்டு அருகே மனைவி, மைத்துனர் அவதூறாக திட்டி மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கியதால் அவமானம் தாங்காமல் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். உறவினர்கள் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தற்கொலை
தச்சம்பட்டு அருகே உள்ள தலையாம்பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் தாமோதரன் (வயது 44). கூலி தொழிலாளி. சம்பவத்தன்று இவரை இவரது மனைவி தமிழரசி மற்றும் மைத்துனர் சுரேஷ் என்ற ஏழுமலை ஆகியோர் அவதூறாக திட்டி மின் கம்பத்தில் கட்டி வைத்து தாக்கியதாக கூறப்படுகிறது.
அதன்பின் வீட்டில் இருந்த நகை, பணம், சான்றிதழ் உள்ளிட்டவைகளை எடுத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது. இதனால் அவமானம் தாங்காத தாமோதரன் வீட்டின் பின்பக்கத்தில் இருந்த மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தனது தந்தையின் சாவுக்கு காரணமாக இருந்த தனது தாயார் தமிழரசி, மாமன் சுரேஷ் என்ற ஏழுமலை உள்ளிட்ட இருவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தச்சம்பட்டு போலீசில் தாமோதனின் 16 வயது மகன் புகார் தெரிவித்து இருந்தார்.
மறியல்
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தாமோதரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு பிரேத பரிசோதனை முடிந்து சொந்த ஊரான தலையாம்பள்ளம் கொண்டு வந்தனர்.
அப்போது உயிரிழந்த தாமோதரன் உடலுடன் உறவினர்கள் தச்சம்பட்டு பஸ் நிறுத்தத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்கள் உயிரிழப்புக்கு காரணமான தமிழரசி மற்றும் சுரேஷ் என்ற ஏழுமலை ஆகிய இருவரையும் கைது செய்யக்கோரி போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கூட்டத்தை கலைய செய்தனர். இதனால் அங்கு ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.