மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து தொழிலாளி படுகாயம்
ஒடுகத்தூர் அருகே மலைப்பாதையில் மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து தொழிலாளி படுகாயம் அடைந்தார்.
பள்ளத்தில் கவிழ்ந்தது
ஒடுகத்தூரை அடுத்து பீஞ்சமந்தை ஊராட்சிக்கு உட்பட்ட புதூர் மலை கிராமத்தை சேர்ந்தவர் சிவமூர்த்தி (வயது 36), கூலித் தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் ஒடுகத்தூரில் வீட்டுக்கு தேவையான அரிசி மூட்டை மற்றும் வீட்டு உபயோக பொருட்களை வாங்கிக்கொண்டு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
மலை கிராமத்திற்கு செல்லும் சாலை கரடு முரடாக இருந்ததால் மோட்டார் சைக்கிளில் மேலே செல்ல முடியாமல் அருகிலுள்ள 15 அடி பள்ளத்தில் தவறி விழுந்தார். அப்போது மோட்டார் சைக்கிள் அவர் மீது விழுந்ததில் மோட்டார் சைக்கிள் கண்ணாடி கம்பி உடைந்து சிவமூர்த்தியின் வாயில் குத்தியது. இதில் படுகாயம் அடைந்த சிவமூர்த்தி மயக்க நிலையில் இரவு முழுவதும் அங்கேயே கிடந்துள்ளார்.
கம்பி புகுந்தது
பள்ளத்தில் கிடந்ததால் அவரை யாரும் கவனிக்கவில்லை. ஒடுகத்தூருக்கு சென்றவர் வீடு திரும்பாததால் நேற்று காலை அவரை உறவினர்கள் அக்கம்பக்கம் மற்றும் ஒடுகத்தூர் செல்லும் பாதை வழியாக தேடி வந்தனர். அப்போது மலைப்பாதை அருகே பள்ளத்தில் படுகாயம் அடைந்து மயங்கி கிடந்த சிவமூர்த்தியை மீட்டனர்.
அவரது வாயிலிருந்த இரும்பு கம்பியை அகற்ற முடியாததால், எந்திரத்தைக் கொண்டு கம்பியை இரண்டாக உடைத்தனர். பின்பு அவரை ஒடுகத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்று அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை வழங்கப்பட்டது.
பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து வேப்பங்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.