ஆத்தூர் அருகே பயங்கரம் கூலித்தொழிலாளி கல்லால் அடித்துக்கொலை


ஆத்தூர் அருகே பயங்கரம் கூலித்தொழிலாளி கல்லால் அடித்துக்கொலை
x

ஆத்தூர் அருகே கூலித்தொழிலாளி கல்லால் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சேலம்

ஆத்தூர்:

கூலித்தொழிலாளி

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள மல்லியகரை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட கோபாலபுரம் கிராமம் நடுவீதியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 54). விவசாய கூலித்தொழிலாளி. இவரது மனைவி முனியம்மாள் என்பவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்று விட்டார். பின்னர் அவர் பச்சையம்மாள் என்பவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார்.

முருகேசனுக்கு முதல் மனைவி மூலம் ஒரு மகன், ஒரு மகளும், 2-வது மனைவி மூலம் 2 மகள்களும் உள்ளனர். இவர்களுக்கு திருமணம் ஆகி விட்டது.

இந்த நிலையில் முருகேசன் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால், தினமும் மது அருந்துவதை வழக்கமாக கொண்டு இருந்ததாக தெரிகிறது. நேற்று முன்தினம் கோபாலபுரம் கிராமத்திற்கு அருகில் உள்ள கருத்தராஜாபாளையத்தில் உள்ள அரசு டாஸ்மாக் மதுபான கடைக்கு மது குடிக்க சென்றுள்ளார். பின்னர் அவர் வீடு திரும்ப வில்லை.

கொலை

இதனிடையே நேற்று காலை கருத்தராஜாபாளையத்தில் உள்ள மதுக்கடையில் இருந்து சுமார் ½ கிலோமீட்டர் தூரத்தில் உள்ள அரசு சர்க்கரை ஆலை அமைய உள்ள இடத்தின் அருகே முருகேசன் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.

இது குறித்து தகவல் அறிந்ததும் ஆத்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு ராமச்சந்திரன், மல்லியகரை போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) முருகேசன், மற்றும் போலீசார் விரைந்து சென்று பிணமாக கிடந்த முருகேசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் முருகேசன், கல்லால் அடித்துக்கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.

3 பேரிடம் விசாரணை

இதைத்தொடர்ந்து போலீசார் முருகேசனுடன், இரவில் மது அருந்திய அதே பகுதியை சேர்ந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மதுகுடிக்கும் போது ஏற்பட்ட தகராறில் கல்லால் அடித்து முருகேசன் கொல்லப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என மல்லியகரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story