மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
களக்காடு அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலியானார்.
களக்காடு:
களக்காடு அருகே கல்லடி சிதம்பரபுரத்தைச் சேர்ந்தவர் திரவியராஜ். இவருடைய மகன் சேர்மன் துரை (வயது 19). கட்டிட தொழிலாளியான இவர் நேற்று களக்காடு அருகே கீழ சாலைப்புதூர் தெற்கு தெருவில் சிவலிங்கம் என்பவரது வீட்டு கட்டுமான பணியில் ஈடுபட்டார். அப்போது அவர், இரும்பு கம்பிகளை துண்டிக்க பயன்படுத்தும் கருவியின் ஒயரை சுவிட்ச் போர்டில் சொருகி இயக்க முயன்றார்.
அப்போது எதிர்பாராதவிதமாக சேர்மன் துரையின் மீது மின்சாரம் தாக்கியது. இதில் படுகாயமடைந்து மயங்கி விழுந்த அவரை காப்பாற்றி சிகிச்சைக்காக களக்காடு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே சேர்மன்துரை இறந்ததாக தெரிவித்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும், களக்காடு போலீசார் விரைந்து சென்று, இறந்த சேர்மன் துரையின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.