மோட்டார் சைக்கிள் மீது மினி லாரி மோதி தொழிலாளி பலி
வாணியம்பாடி அருகே மோட்டார் சைக்கிள் மீது மினி லாரி மோதி தொழிலாளி பலியானார்.
வாணியம்பாடி
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த தும்பேரி அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் தண்டபாணி (வயது 57), கட்டிடத்தொழிலாளி. இவர் அதேப் பகுதியை சேர்ந்த நண்பர் திருப்பதி (40) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் அமர்ந்து வீட்டிற்கு சென்றுள்ளார்.
ஜாப்ராபாத் அருகே சென்று கொண்டிருந்தபோது, குறுக்கே திடீரென நாய் வந்த காரணத்தினால், திருப்பதி திடீரென மோட்டார்சைச்கிளை நிறுத்தியுள்ளார். அப்போது பின்னால் வாணியம்பாடியில் இருந்து, ஜாப்ராபாத் நோக்கி சென்ற மினி லாரி மோட்டார்சைக்கிள் மீது மோதியதாக கூறப்படுகிறது.
இதில் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து சென்ற தண்டபாணி தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தார்.
அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு, வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உடன் வந்த திருப்பதிக்கு லேசானகாயம் ஏற்பட்டது.
இதுகுறித்து வாணியம்பாடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.