போலீஸ் ஏட்டை கத்தியால் குத்திய வழக்கில் தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை


போலீஸ் ஏட்டை கத்தியால் குத்திய வழக்கில் தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை
x

போலீஸ் ஏட்டை கத்தியால் குத்திய வழக்கில் தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கரூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

கரூர்

கூலி தொழிலாளி

கரூர் பசுபதிபாளையம் போலீஸ் நிலையத்தில் குற்றப்பிரிவு போலீஸ் ஏட்டாக பணியாற்றியவர் பத்மசீலன் (வயது 52). இவர் 2014-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 10-ந்தேதி மாலை பணி முடித்து அவ்வழியாக சென்று கொண்டிருந்தார்.அப்போது திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள நாகைகோட்டை சவேரியார்பட்டியை சேர்ந்த கூலி ெதாழிலாளி தெய்வேந்திரன் என்கிற பாண்டி (64) கரூர் காளியப்பனூர் பகுதியில் உள்ள ஒரு கடை முன்பு உறங்கிக் கொண்டிருந்தார். இதையடுத்து பத்மசீலன், தெய்வேந்திரனை எழுப்பி இங்கு உறங்க கூடாது என கூறியுள்ளார்.

போலீஸ் ஏட்டுக்கு கத்திக்குத்து

இதில் ஆத்திரமடைந்த தெய்வேந்திரன் தான் மறைத்து வைத்திருந்த சேவல் சண்டைகளில் பயன்படுத்தும் கூர்மையான கத்தியால் போலீஸ் ஏட்டு பத்மசீலனை இடுப்பில் குத்தினார்.இதில் படுகாயம் அடைந்த பத்மசீலன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்து பசுபதிபாளையம் போலீஸ் நிலையத்தில் பத்மசீலன் கொடுத்த புகாரின்பேரில், போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து தெய்வேந்திரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

10 ஆண்டு சிறை தண்டனை

இது தொடர்பான வழக்கு கரூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதையடுத்து வழக்கு விசாரணை அனைத்தும் முடிந்ததையடுத்து கரூர் மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி நசீமா பானு இதற்கான தீர்ப்பினை வழங்கினார்.அந்த தீர்ப்பில் ஆபாசமாக திட்டியதற்காக 3 மாதம் சிறை தண்டனையும், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுப்பதற்காக 2 ஆண்டு சிறை தண்டனையும், கொலை முயற்சி குற்றத்திற்காக 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.100 அபராதமும், அபராத தொகை கட்ட தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனையும், மதுபோதையில் குற்றத்தில் ஈடுபட்டதற்காக 3 மாத சிறைத்தண்டனையும் வழங்கி, இந்த தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டார். ஏக காலத்தில் என தீர்ப்பு கூறப்பட்டதால் தெய்வேந்திரன் 10 ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும்.


Next Story