சொத்து பிரச்சினையில் தொழிலாளிக்கு கத்திக்குத்து
சேலத்தில் சொத்து பிரச்சினையில் தொழிலாளியை கத்தியால் குத்திய தந்தை மற்றும் தம்பியை போலீசார் கைது செய்தனர்.
வெள்ளிப்பட்டறை தொழிலாளி
சேலம் பள்ளப்பட்டி நடுத்தெருவை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 68). இவருக்கு மாரியப்பன், செங்கோடன் (40), மாரிமுத்து (35) ஆகிய 3 மகன்கள் உள்ளனர். செங்கோடன் வெள்ளிப்பட்டறையில் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வீட்டுக்கு வந்த அவர் தனது தந்தையிடம் சொத்தை பிரித்து தருமாறு கேட்டார்.
இதற்கு அவர் மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர்களிடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த கந்தசாமி, மாரிமுத்து ஆகியோர் சேர்ந்து செங்கோடனின் தலையில் கத்தியால் குத்தினர். இதில் காயம் அடைந்த அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
2 பேர் கைது
இதுதொடர்பாக பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராணி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதையடுத்து செங்கோடனை கத்தியால் குத்திய கந்தசாமி, மாரிமுத்து ஆகியோரை நேற்று கொலை முயற்சி வழக்கில் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.