தொழிலாளி கத்தியால் குத்தி கொலை
விருத்தாசலத்தில் மனைவியை கிண்டல் செய்ததை தட்டிக்கேட்ட செங்கல் சூளை தொழிலாளியை கத்தியால் குத்தி கொலை செய்த சிறுவன் கைது செய்யப்பட்டான்.
விருத்தாசலம்,
கேலி-கிண்டல்
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் மணலூர் காலனி பகுதியை சேர்ந்தவர் விஜய் என்ற விஜயகுமார்(வயது 33). செங்கல் சூளை தொழிலாளியான இவருக்கு சித்ரா(30) என்ற மனைவியும், 12 வயதில் ஒரு மகனும், 10 வயதில் ஒரு மகளும் உள்ளனர். நேற்று மாலை சித்ரா அதேபகுதியில் உள்ள கடைக்கு பொருட்கள் வாங்க நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அதேபகுதியை சேர்ந்த 17 வயதுடைய சிறுவன் சித்ராவை கேலி-கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சித்ரா, தனது கணவரிடம் கூறியுள்ளார். இதையடு்த்து விஜய், சிறுவனை சந்தித்து எதற்காக எனது மனைவியை கிண்டல் செய்தாய்? என தட்டிக்கேட்டதோடு, அவனை கத்தியால் கழுத்தில் கீறியதாகவும் கூறப்படுகிறது.
கத்தியால் குத்திக்கொலை
இதனால் ஆத்திரமடைந்த சிறுவன் தனது வீட்டில் இருந்து கத்தியை எடுத்து வந்து, விஜய் கழுத்தில் குத்தினான். இதில் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து விழுந்து மயங்கிய விஜயை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், விஜய் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தொழிலாளியை கத்தியால் குத்திக் கொலை செய்த சிறுவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறாா்கள். இந்த சம்பவம் விருத்தாசலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படு்த்தியுள்ளது.