தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்
தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்
குலசேகரம்:
குமரி மாவட்டத்தில் அரசுக்கு சொந்தமான ரப்பர் தோட்டங்கள் ஏராளமாக உள்ளன. அதன்படி குலசேகரம் அருகே அரசு ரப்பர் கழகத்துக்கு சொந்தமான சிற்றார் கோட்டம் பிரிவு-2 உள்ளது. இந்த கோட்டத்தில் 80 தொழிலாளர்கள் ரப்பர் பால் வெட்டுவது, களப்பணி உள்ளிட்ட வேலைகளை செய்து வருகின்றனர். அரசு ரப்பர் கழகத்தில் ஓணம் மற்றும் தீபாவளி பண்டிகைகளை முன்னிட்டு தொழிலாளர்களுக்கு முன்பணம் வழங்கப்படுவது வழக்கம். அதன்படி ஓணம் பண்டிகையையொட்டி சிற்றார் கோட்டம் பிரிவு 2-ல் வேலை பார்த்து வரும் தொழிலாளர்களில் 30 பேருக்கு முன்பணம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்தநிலையில் ஓணம் பண்டிகை முன்பணம் வழங்க கேட்டு அனைத்து தொழிலாளர்களும் சிற்றார் கோட்டம் பிரிவு 2-ல் பால் சேகரிப்பு மையத்தில் நேற்று காலை முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் சி.ஐ.டி.யு. சார்பில் விஜயகுமார், ஜெஸ்டின், திவாகரன், விஜயகுமாரி, தொ.மு.ச. சார்பில் ஞானசுந்தரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தோட்ட தொழிலாளர் சங்க தலைவர் பி.நடராஜன் போராட்டம் குறித்து விளக்கி பேசினார். மாலை 4 மணியை கடந்தும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்த வராததால் போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது. மேலும் இரவிலும் போராட்டம் நீடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.