ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை தொழிலாளர்கள் முற்றுகை
100 நாள் வேலை வழங்காததை கண்டித்து, அணைக்கட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை, தொழிலாளர்கள் முற்றுகையிட்டனர்.
100 நாள் வேலை வழங்காததை கண்டித்து, அணைக்கட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை, தொழிலாளர்கள் முற்றுகையிட்டனர்.
வேலை வழங்க வில்லை
அணைக்கட்டு ஊராட்சி ஒன்றிய திப்பசமுத்திரம் ஊராட்சிக்குட்பட்ட குச்சிபாளையம் பகுதிகளில் ஒரு நாளைக்கு 700 பேர் சுழற்சி முறையில் 100 நாள் திட்டத்தில் வேலை செய்து வருகின்றனர். தனசேகரன் என்பவர் பணித்தள பொறுப்பாளாராக இருந்தார். தற்போது அவருக்கு பதிலாக அதே பகுதியைச் சேர்ந்த சுசிலா என்பவரை திப்பசமுத்திர ஊராட்சி மன்ற தலைவர் புஷ்பா கிருஷ்ணன் நியமனம் செய்துள்ளதாக தெரிகிறது.
இதுகுறித்து அணைக்கட்டு ஒன்றியக்குழு தலைவர் பாஸ்கரனுக்கு தெரிவிக்காததால் 100 நாள் வேலை வழங்கும் வருகை பதிவேட்டை வழங்காமல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் காலம் கடத்தி, இரண்டு நாட்களுக்கு மேல் அந்தப் பகுதியில் 100 நாள் வேலை வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.
முற்றுகை போராட்டம்
இது சம்பந்தமாக 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் ஊராட்சி மன்ற தலைவரை அணுகி கேட்டுள்ளனர். அதற்கு சுசிலாவை பணித்தளப் பொறுப்பாளராக நியமனம் செய்ததால் அணைக்கட்டு ஊராட்சிஒன்றிய குழு தலைவர் வேலை கொடுக்காமல் இழுத்தடித்து வருகிறார் என்று ஊராட்சி மன்ற தலைவர் கூறியதாகத் தெரிகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த 100 நாள் திட்டப் பணியாளர்கள் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் நேற்று பகல் 11 மணிக்கு அணைக்கட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு வேலை வழங்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர். அணைக்கட்டு வட்டார வளர்ச்சி அலுவலர் சுதாகரன், ஒன்றியக் குழு தலைவர் பாஸ்கரன் ஆகியோர் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தை
அப்போது ஊராட்சி மன்ற தலைவருக்கும், ஒன்றியக் குழு தலைவருக்கும் பணி தள பொறுப்பாளர்கள் நியமனம் செய்வதில் குளறுபடி இருப்பதால் எங்களுக்கு வேலை கொடுக்காமல் இருப்பது என்ன நியாயம் என்று பணியாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் ஒன்றியக்குழு தலைவர் ஆகியோர் சமாதானம் செய்து சுசீலா மற்றும் தனசேகரன் ஆகிய இருவரையும் சுழற்சி முறையில் பணித்தள பொறுப்பாளராக வேலை வாங்க அனுமதிப்பதாகவும், நாளை முதல் வேலை வழங்கப்படும் என்றும் கூறினர். அதைத்தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் சுமார் 2 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.