சிற்றாறு பகுதியில் புலி நடமாட்டத்தால் தொடரும் அச்சம்:பால்வடிப்பு பணியை புறக்கணித்த தொழிலாளர்கள் ரப்பர் கழகத்திற்கு ரூ.1 லட்சம் இழப்பு
சிற்றாறு பகுதியில் புலி நடமாட்டத்தால் ஏற்பட்டுள்ள தொடரும் அச்சத்தால் ரப்பர் பால் வடிப்பு பணியை தொழிலாளர்கள் புறக்கணித்தனர். இதனால் ரப்பர் கழகம் ரூ.1 லட்சம் இழப்பை சந்திக்க வேண்டி உள்ளது.
குலசேகரம்:
சிற்றாறு பகுதியில் புலி நடமாட்டத்தால் ஏற்பட்டுள்ள தொடரும் அச்சத்தால் ரப்பர் பால் வடிப்பு பணியை தொழிலாளர்கள் புறக்கணித்தனர். இதனால் ரப்பர் கழகம் ரூ.1 லட்சம் இழப்பை சந்திக்க வேண்டி உள்ளது.
சிற்றாறு குடியிருப்பு
சிற்றாறு தொழிலாளர்களின் குடியிருப்பு வனப்பகுதியை சூழ்ந்த இடத்தில் அரசு ரப்பர் கழகம் உள்ளது. இந்த குடியிருப்பில் வசிக்கும் தொழிலாளர்களுக்கு வன விலங்குகளின் அச்சுறுத்தல் தொடர்ந்து இருந்து வருகிறது.
யானை, சிறுத்தை, கரடி, காட்டெருமை, காட்டுப்பன்றி என வன விலங்குகள் இவர்களை அச்சுறுத்தி வருகின்றன. இதில் உச்சபச்சமாக கடந்த ஆண்டு ஞானவதி என்ற பெண் தொழிலாளியை காட்டு யானை தாக்கி கொன்றது.
மாட்டை குதறிய புலி
இந்தநிலையில் கடந்த 5-ந் தேதி இந்த குடியிருப்பைச் சேர்ந்த மோகன்தாஸ் என்ற தொழிலாளியின் கொட்ட கையில் கட்டியிருந்த ஆட்டை புலி அடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து வனத்துறையினர் புலி நடமாட்டத்தைக் கண்காணிக்கும் வகையில் 10 இடங்களில் கேமராக்கள் வைத்தனர். ஆனால் கண்காணிப்பு கேமராக்களில் புலியின் உருவம் பதிவாகவில்லை.
பின்னர் 8-ந் தேதி இரவு 10 மணிக்கு அந்த குடியிருப்புக்குள் மீண்டும் புலி புகுந்தது. சுரேஷ்குமார் என்ற தொழிலாளியின் வீட்டின் பின்புறம் கட்டியிருந்த பசுமாட்டை கடித்துக் குதறி அதனை தூக்கிச் செல்ல முயன்றது. அந்த சமயத்தில் பசுமாடு அலறியது. இந்த சத்தம் கேட்டு சுரேஷ்குமார் மற்றும் அவரது தந்தை வடிவேல் உள்ளிட்டோர் டார்ச்லைட் அடித்தபடி விரைந்து வந்தனர்.
பொதுமக்கள் அச்சம்
அப்போது புலி பாய்ந்து தப்பியோடியது. புலி தாக்கியதில் கால் மற்றும் தலையில் காயமடைந்த பசுமாட்டுக்கு கால்நடை டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். புலி அட்டகாசத்தால் அங்குள்ள மக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். எந்த நேரத்திலும் மீண்டும் புலி வரலாம் என்ற அச்சத்திலேயே இருக்கின்றனர்.
இதனை தொடர்ந்து புலியின் நடமாட்டத்தைக் கண்காணிக்க மேலும் 15 கேமராக்கள் வைக்கப்பட்டன. மோப்ப நாய் ஆதித்யாவை வரவழைத்து புலி வந்து சென்ற பாதைகள் குறித்த தடயங்களை சேகரித்தனர். இதுதவிர புலியானது இரவில் மறுபடியும் வரும் என்று கருதி ஒரு ஆட்டை குறிப்பிட்ட இடத்தில் கட்டி வைத்து மறைந்திருந்தபடி வனத்துறையினர் கண்காணித்தனர். ஆனால் புலி வரவில்லை.
அதே சமயத்தில் குடியிருப்பு பகுதிக்குள் மீண்டும் நுழையாமல் இருப்பதற்கான நடவடிக்கையில் பொதுமக்களும் ஈடுபட்டனர். இதற்காக குடியிருப்பைச் சுற்றி விறகுகளை போட்டு நெருப்பை எரிய விட்டுள்ளனர்.
பணிக்கு செல்லாத தொழிலாளர்கள்
புலி நடமாட்டம் குறித்த அச்சம் காரணமாக நேற்று காலையில் ரப்பர் தோட்டங்களில் பால்வடிப்பிற்கு செல்ல வேண்டிய பெண் தொழிலாளர்கள் உள்பட சுமார் 80 தொழிலாளர்கள் வேலைக்கு செல்லவில்லை.
பின்னர் தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து ரப்பர் கழக சிற்றாறு பிரிவு மேலாளர் காதர் மைதீனிடம், தங்களின் உயிருக்கு பாதுகாப்பு உத்தரவாதம் இல்லாத நிலையில் ரப்பர் பால்வடிப்புக்கு செல்ல முடியாது என்று கூறி வேலைக்குச் செல்லாத காரணம் குறித்து விளக்க கடிதம் கொடுத்தனர். அதில், நாங்கள் காலை 5.30 மணிக்கு வேலைக்குச் செல்ல வேண்டுமானால் அதிகாலை 3 மணிக்கு எழுந்து சமையல் உள்ளிட்ட பணிகளைச் செய்ய வேண்டும். கழிப்பறைகளுக்கு வீடுகளிலிருந்து சற்று தூரம் செல்ல வேண்டும். இதே போன்று வேலைக்குச் சென்ற பிறகு வீட்டில் உள்ள குழந்தைகளுக்கும், முதியவர்களுக்கும் உயிர் பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. எனவே எங்களது உயிர் பாதுகாப்புக்கு உத்தரவாதம் வழங்கிய பின்னரே வேலைக்குச் செல்ல முடியும் என்று குறிப்பிட்டிருந்தனர்.
வீட்டில் முடங்கிய மாணவர்கள்
தொழிலாளர்கள் வேலைக்கு செல்லாததால் ரப்பர் கழகத்திற்கு நாள் ஒன்றுக்கு ரூ.1 லட்சம் உற்பத்தி இழப்பு ஏற்படும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும் புலியின் அச்சத்தால் பேச்சிப்பாறை பகுதியை சேர்ந்த சில மாணவ, மாணவிகளும் பள்ளிக்கூடங்களுக்கு செல்லவில்லை. வீட்டிலேயே முடங்கினர்.
நேற்று இரவும் மாவட்ட வன அலுவலர் இளையராஜா தலைமையில் களியல் வனச்சரக அலுவலர் முகைதீன் அப்துல் காதர் அடங்கிய வனத்துறையினர் ஒரு ஆட்டுடன் புலி நடமாட்டம் குறித்த கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
தொடரும் புலி நடமாட்டத்தால் சிற்றாறு பகுதியில் மக்கள் அச்சமடைந்து வீட்டிலேயே முடங்கி வருகிறார்கள். இதனை தவிர்க்க புலியை விரைந்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.