மாட்டு வண்டியுடன் மனு அளிக்க வந்த தொழிலாளர்கள் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
பாலாற்றில் மணல் அள்ள அனுமதிக்கக்கோரி மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்துக்கு மாட்டு வண்டிகளுடன் தொழிலாளர்கள் மனு அளிக்க வந்தனர். அவர்கள் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பாலாற்றில் மணல் அள்ள அனுமதிக்கக்கோரி மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்துக்கு மாட்டு வண்டிகளுடன் தொழிலாளர்கள் மனு அளிக்க வந்தனர். அவர்கள் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
குறைதீர்வு நாள் கூட்டம்
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி முன்னிலை வகித்தார். இதில் முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா உள்ளிட்டவை தொடர்பாக 343 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
கூட்டத்தில் வேலூர் விருப்பாட்சிபுரம் நம்பிராஜபுரம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், எங்கள் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். குடிநீர், கால்வாய்வசதி, தெரு மின்விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்துள்ளோம். ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் பொய்யான தகவல்களை உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கின்றனர். எனவே எங்கள் பகுதியில் அடிப்படை வசதிகள் உடனடியாக செய்துதர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
பிச்சை எடுக்கும் போராட்டம்
வேலூர் மாவட்ட மாட்டுவண்டி தொழிலாளர்கள் நலச்சங்கத்தினர் குறைதீர்வு நாள் கூட்டத்தில் மனு அளிக்க மாட்டு வண்டிகளுடன் ஊர்வலமாக கலெக்டர் அலுவலகம் நோக்கி வந்தனர். அவர்களை ஆஞ்சநேயர் கோவில் அருகே போலீசார் தடுத்தி நிறுத்தினர். 5 பேர் மட்டும் குறைதீர்வு நாள் கூட்டத்துக்கு சென்று மனுஅளிக்கும்படி போலீசார் கூறினர்.
அதனை ஏற்காத மாட்டுவண்டி தொழிலாளர்கள் பாலாற்றில் மணல் அள்ள அனுமதி அளிக்காததால் தங்கள் வாழ்வாதாரத்துக்காக பிச்சை எடுக்கும் நிலைக்கு சென்றுவிட்டதாக கூறி கையில் பாத்திரம் ஒன்றை வைத்து பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்தினர். இதனால் அந்த பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் அவர்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர். அதில், பாலாற்றில் இருந்து மாட்டு வண்டியில் மணல் அள்ளி அரசு மணல் குவாரிக்கு கொண்டு செல்லவும், அங்கிருந்து மணல் எடுத்து செல்லவும் மாட்டு வண்டி தொழிலாளர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும். அனுமதி அட்டை வழங்கும்படி 3 மாதங்களாக பலமுறை அதிகாரிகளை நேரில் சந்தித்து மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஒரு யூனிட் மணலுக்கு ரூ.105 பெற வேண்டும். கூடுதல் தொகை வசூலிக்க கூடாது என்று தெரிவித்திருந்தனர்.
தேசிய உழவர் கூட்டமைப்பினர் அளித்த மனுவில், அனைத்து கூட்டுறவு வங்கிகளிலும் வழங்கப்பட்ட பயிர்கடனை உடனடியாக செலுத்த வேண்டும் என்று வங்கி மேலாளர்கள் நிர்பந்தம் செய்கிறார்கள். இதனை தடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
மகளுக்கு மூளைகாய்ச்சல்
மாற்றுத்திறனாளிகள் இருக்கும் இடத்துக்கு சென்று கலெக்டர் குமாரவேல்பாண்டியன் அவர்களிடம் மனுக்களை பெற்றார். அப்போது காட்பாடியை அடுத்த வண்டறந்தாங்கல் பகுதியை சேர்ந்த உஷா என்பவர் தனது 5 வயது மாற்றுத்திறனாளி குழந்தையுடன் மனு அளித்தார்.
அதில் எனது மகள் மூளைகாய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளாள். அவளின் சிகிச்சைக்கு உதவ வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து கலெக்டர் உடனடியாக ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து உஷா மற்றும் மகளை அதில் ஏற்றி சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.