லாரிகளில் ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் தொழிலாளர்கள்


லாரிகளில் ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் தொழிலாளர்கள்
x
தினத்தந்தி 27 Oct 2022 12:15 AM IST (Updated: 27 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டி அருகே மலைப்பாதையில் லாரிகளில் ஆபத்தான முறையில் தொழிலாளர்கள் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இதனை அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்கக்கோரி சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

நீலகிரி

ஊட்டி,

ஊட்டி அருகே மலைப்பாதையில் லாரிகளில் ஆபத்தான முறையில் தொழிலாளர்கள் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இதனை அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்கக்கோரி சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

ஆபத்தான பயணம்

நீலகிரி மாவட்டத்தில் கேரட், பீட்ரூட், உருளைகிழங்கு, பூண்டு, காலிபிளவர் உள்ளிட்ட மலை காய்கறிகள் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. அறுவடை செய்யப்படும் கேரட்டுகள் மூட்டைகளில் நிரப்பி, லாரிகளில் ஏற்றப்பட்டு சுத்திகரிப்பு நிலையங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. அவ்வாறு கொண்டு செல்லும் போது, லாரியில் மூட்டைகளுக்கு மேல் அமர்ந்து ஆண், பெண் தொழிலாளர்கள் ஆபத்தான முறையில் சென்று வருகின்றனர்.

லாரியில் காய்கறி மூட்டைகள் அதிகமாக ஏற்றப்படும் போது, அதற்கு மேல் தொழிலாளர்கள் அமர்வதால் பாதுகாப்பற்ற நிலை ஏற்படுகிறது. மேலும் வாகன போக்குவரத்து நிறைந்த மலைப்பாதைகளில் கடந்த சில நாட்களாக லாரிகள் உள்ளிட்ட சரக்கு வாகனங்களில் அதிகளவில் பொதுமக்கள் பயணிப்பதை காண முடிகிறது. வளைந்து நெளிந்து செல்லும் கொண்டை ஊசி வளைவுகளில், வாகனங்கள் செல்வதே பெரும்பாடாக இருக்கிறது.

கண்காணிக்க வேண்டும்

இந்தநிலையில் லாரிகளில் விளைபொருட்கள் மீது அமர்ந்து எந்தவித பிடிமானமும் இல்லாமல் பெண்களும் பயணிப்பதால் விபரீதம் ஏற்படும் நிலை உள்ளது. தற்போது குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் சாலையை அகலப்படுத்தி, பாலம் கட்டும் பணிகள் நடந்து வருகிறது.

இதற்கிடையே தங்களை சுற்றி என்ன நடக்கிறது என்று தெரியாமல் அதில் பெரும்பாலானோர் செல்போன் பேசிய படி வாகனங்களில் அமர்ந்து செல்கின்றனர்.

மலைப்பிரதேசத்தில் ஒரு லாரியில் 10-க்கும் மேற்பட்ட நபர்கள் சர்வ சாதாரணமாக செல்கின்றனர். ஒருவேளை ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால், உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, சோதனை சாவடிகளை கடக்கும்போது, விதிகளை மீறி இவ்வாறு ஆட்களை சரக்கு வாகனங்களில் ஏற்றி வருவதை தடுக்க போலீசார் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். மேலும் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு செய்து, ஆபத்தான முறையில் தொழிலாளர்களை ஏற்றி செல்லும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


Next Story