தொழிலாளர்கள், அதிகாரிகள் காத்திருப்பு போராட்டம்
மேட்டூர் அனல் மின் நிலையத்தில் தொழிலாளர்கள், அதிகாரிகள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
மேட்டூர்:-
தமிழ்நாடு மின்வாரிய பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வை உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய தொழிலாளர்கள் மற்றும் பொறியாளர்கள் உள்பட அனைத்து தரப்பு அதிகாரிகளும் காத்திருப்பு வேலை நிறுத்த போராட்டத்தில் மேட்டூர் அனல் மின்நிலையத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். போராட்டம் குறித்து தகவல் கிடைத்ததும், மேட்டூர் தொகுதி எம்.எல்.ஏ. சதாசிவம் மேட்டூர் அனல் மின்நிலையத்திற்கு சென்று, போராட்டத்தில் ஈடுபட்ட அதிகாரிகள், பொறியாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து பேசினார். அவருடன் பாட்டாளி தொழிற்சங்க நிர்வாகி முனுசாமி, மேட்டூர் அனல் மின்நிலைய பாட்டாளி தொழிற்சங்க செயலாளர் மாரியப்பன் மற்றும் பா.ம.க. நிர்வாகிகள் உடன் சென்றனர்.
இதே கோரிக்கைகளை வலியுறுத்தி தாரமங்கலம் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு மின் கட்டண வசூல் உள்பட பணிகளை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் புறக்கணித்து போராட்டம் நடத்தினர்.
தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய செயற்பொறியாளர் சண்முகவேல் மற்றும் மேற்பார்வையாளர் பூபதி ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.