திண்டுக்கல் மாநகராட்சியில் ஓய்வுபெறும் நாளில் ஆணையரை முற்றுகையிட்டு பணியாளர்கள் போராட்டம்


திண்டுக்கல் மாநகராட்சியில் ஓய்வுபெறும் நாளில் ஆணையரை முற்றுகையிட்டு  பணியாளர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 1 April 2023 2:15 AM IST (Updated: 1 April 2023 2:15 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாநகராட்சியில் ஓய்வுபெறும் ஆணையரை முற்றுகையிட்டு பணியாளர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். குற்றச்சாட்டு குறிப்பாணைகளை ரத்து செய்யக்கோரி பல மணி நேரம் போராட்டம் நடத்தினர்.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாநகராட்சியில் ஓய்வுபெறும் ஆணையரை முற்றுகையிட்டு பணியாளர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். குற்றச்சாட்டு குறிப்பாணைகளை ரத்து செய்யக்கோரி பல மணி நேரம் போராட்டம் நடத்தினர்.

திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர்

திண்டுக்கல் மாநகராட்சியின் ஆணையராக பணியாற்றியவர் சிவசுப்பிரமணியன். இவர் நேற்று பணி ஓய்வு பெற்றார். இதற்கிடையே மாநகராட்சி பணியாளர்கள் 71 பேருக்கு ஏற்கனவே குற்றச்சாட்டு குறிப்பாணை வழங்கப்பட்டு இருந்ததாக தெரிகிறது. இதனால் பணியாளர்கள் மனஉளைச்சலில் இருந்தனர்.

இந்த நிலையில் நேற்று மாலை 3 மணிக்கு ஆணையர் சிவசுப்பிரமணியனை, மாநகராட்சி பணியாளர்கள் சந்தித்து பணி ஓய்வுக்கு வாழ்த்து தெரிவித்தனர். அப்போது தங்களுக்கு வழங்கப்பட்ட குற்றச்சாட்டு குறிப்பாணை, பணி பதிவேட்டில் பதிவாகிவிட்டால் பதவி உயர்வு, சம்பள உயர்வு ஆகியவை பாதிக்கப்படும். எனவே குற்றச்சாட்டு குறிப்பாணைகளை ரத்து செய்யும்படி கோரிக்கை விடுத்தனர்.

முற்றுகை-தர்ணா

ஆனால் ஆணையர் சிவசுப்பிரமணியன், பணியாளர்கள் மீதான குற்றச்சாட்டு குறிப்பாணையை தன்னால் ரத்து செய்ய இயலாது என்று தெரிவித்தார். இதனால் மாநகராட்சி பணியாளர்கள் விரக்தி அடைந்து வெளியே வந்தனர். இதற்கிடையே மாநகராட்சி அலுவலர் ஒருவரை ஆணையர் அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு கிளம்பியது.

இதையடுத்து மாநகராட்சி பணியாளர்கள் திரண்டு சென்று ஆணையரை முற்றுகையிட்டனர். ஆனால் உயர் அதிகாரிகளை பார்க்க செல்வதாக கூறி ஆணையர் அங்கு இருந்து சென்றுவிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த பணியாளர்கள், மாநகராட்சி நுழைவுவாயிலில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதில் பங்கேற்ற சுகாதார ஆய்வாளர் தங்கவேல் உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியாமல் அழுதுவிட்டார்.

பலமணி நேரம் போராட்டம்

அப்போது அங்கு வந்த மேயர் இளமதி, பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் தங்களுக்கு வழங்கப்பட்ட குற்றச்சாட்டு குறிப்பாணையை ரத்து செய்ய வேண்டும், அலுவலரை அவதூறாக பேசியதற்கு ஆணையர் மன்னிப்பு கேட்க வேண்டும், அதுவரை போராட்டம் தொடரும் என்று கூறி பணியாளர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர்.

மாலை 3.30 மணிக்கு தொடங்கிய தர்ணா போராட்டம் இரவு 10 மணியை தாண்டி நடைபெற்றது. இதுகுறித்து சென்னை நகராட்சி நிர்வாக ஆணையர் அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் பணி ஓய்வுபெறும் நாளில் அவரை பணியாளர்கள் முற்றுகையிட்டதோடு, பல மணி நேரம் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story