தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி குறைதீர்க்கும் கூட்டம்
வேதாரண்யத்தில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 27-ந்தேதி நடக்கிறது என்று திருச்சி மண்டல முதன்மை ஆணையர் முருகவேல் தெரிவித்துள்ளார்.
வேதாரண்யத்தில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 27-ந்தேதி நடக்கிறது என்று திருச்சி மண்டல முதன்மை ஆணையர் முருகவேல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
விழிப்புணர்வு முகாம்
மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இ.பி.எப். (வருங்கால வைப்பு நிதி நிறுவனம்) சார்பில் "நிதி ஆப்கே நிகத்" என்ற பெயரில் இ.பி.எப் தொடர்பான குறைதீர்க்கும் கூட்டம் மற்றும் விழிப்புணர்வு முகாம் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி நாகை மாவட்டத்திற்கான தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி குறை தீர்க்கும் கூட்டம் வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக நினைவு கட்டிடத்தில் வருகிற 27-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை நடக்கிறது.
உயிர்வாழ் சான்று
இந்த முகாமில் இ.பி.எப். தொடர்பான சந்தேகங்களுக்கு தெளிவான விளக்கம் அளிக்கப்பட உள்ளது. செட்டில்மெண்ட் பெறுவது, வெவ்வேறு இ.பி.எப். கணக்குகளை ஒரே கணக்கில் இணைப்பது, இ.பி.எப். சந்தாதாரர்கள் தங்களது யு.ஏ.என். கணக்கினை பயன்படுத்தும் முறை, ஆதார், வங்கி கணக்குகள் உள்ளிட்ட தங்களது சுய விவரங்களை தங்களது யு.ஏ.என். கணக்கில் இணைத்தல் தொடர்பான சந்தேகங்களுக்கு தெளிவான விளக்கம் அளிக்கப்பட உள்ளது. மேலும் ஓய்வூதியர்கள் மின்னணு உயிர்வாழ் சான்று பதிவு செய்ய இந்த முகாமிலேயே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆதாரங்களுடன்...
சந்தாதாரர்கள் தங்களது பெயர் மாற்றக் கோரிக்கை உட்பட அனைத்து கோரிக்கைகளையும் தகுந்த ஆதாரங்களுடன், எழுத்துப்பூர்வமாக முகாமில் சமர்ப்பிக்கலாம். இ.பி.எப். சந்தாதாரர்கள், தொழில் நிறுவனங்களின் முதலாளிகள், முகவர்கள் மற்றும் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் விலக்கு பெற்ற தொழில் நிறுவனங்களின் உறுப்பினர்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம். இவ்வாறு இதில் கூறப்பட்டுள்ளது.