வேலை நேரத்தை 12 மணி நேரமாக அதிகரிக்கும்தொழிலாளர் சட்ட திருத்த மசோதாவை அரசு திரும்ப பெற வேண்டும்
வேலை நேரத்தை 12 மணி நேரமாக அதிகரிக்கும் தொழிலாளர் சட்ட திருத்த மசோதாவை அரசு திரும்ப பெற வேண்டும் என்று கலெக்டரிடம் வலியுறுத்தப்பட்டது.
தொழிலாளர் வேலைநேரத்தை 8 மணியிலிருந்து 12 மணி நேரமாக அதிகரிக்கும் தொழிலாளர் சட்டதிருத்த மசோதாவை தமிழக அரசு திரும்ப பெறவேண்டும் என்று வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.
குறைதீர்க்கும் நாள்
தூத்துக்குடி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட் கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். கூடுதல் கலெக்டர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ், மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் மனு கொடுத்தனர்.
நிலத்தடி நீர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் எம்.எஸ்.ராஜா தலைமையில் ஏரல் அருகே உள்ள நட்டாத்தி கிராமத்தை சேர்ந்த மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில், ஏரல் தாலுகா நட்டாத்தி கிராமத்தில் விவசாயத்துக்கு ஏதுவாக நிலத்தை சமன் செய்ய வேண்டும் என அனுமதி பெற்றுக் கொண்டு சட்டவிரோதமாக அதிகமாக மண் எடுக்கப்பட்டு செங்கல் சூளைகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
எனவே, மாவட்ட கலெக்டர் நேரடியாக கள ஆய்வு மேற்கொண்டு மண் கொள்ளையை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். கணக்கில் காட்டாமல் எடுக்கப்பட்ட கனிமத்தின் அளவை கணக்கீடு செய்து, அதற்கான தொகையை அனுமதி பெற்ற நபரிடம் இருந்து வசூல் செய்ய வேண்டும். மேலும், மண் கொள்ளைக்கு துணை போன அதிகாரிகள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.
மசோதாவை திரும்ப பெற வேண்டும்
இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் சுரேஷ் தலைமையில் நிர்வாகிகள் 8 மணி நேர வேலையை 12 மணி நேரமாக அதிகரித்ததை கண்டித்து கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில், உலக தொழிலாளர் வர்க்கம் போராடி பெற்ற 8 மணி நேர வேலையை 12 மணி நேரமாக அதிகரிக்கும் தொழிலாளர் உரிமைகளை பறிக்கும் விதமாக தமிழக அரசு தொழிலாளர் சட்டத்தில் திருத்தம் செய்து மசோதா நிறைவேற்றி உள்ளது. இது முற்றிலும் ஏற்கத்தக்கதல்ல. தமிழக அரசு உடனடியாக இதனை திரும்ப பெற வேண்டும் என்று கூறி உள்ளனர்.
நடவடிக்கை
இந்திய மாணவர் சங்கத்தினர், மாவட்ட தலைவர் கார்த்திக் தலைமையில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில், தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கல்லூரி மாணவர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது. இதனை தடுத்து நிறுத்த மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.
தமிழ் விவசாயிகள் சங்கத்தின் தலைவர் ஓ.ஏ.நாராயணசாமி தலைமையில் நிர்வாகிகள் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில், கயத்தாறு தாலுகா தளவாய்புரம் கிராமத்தில் தனியார் நிறுவனத்தினர் விவசாயிகளின் அனுமதி இல்லாமல் விவசாய நிலங்களில் பயிர்களை அழித்து உயர் மின் கோபுரங்களை அமைத்து வருகின்றனர்.
இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனை தடுக்கவும், விவசாய நிலங்களில் பயிர்களை அழித்து அமைக்கப்பட்ட உயர் மின் கோபுரங்களை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.
காங்கிரஸ் முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் மச்சேந்திரன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வழிபாட்டு தலங்கள், கல்வி சாலை, பஸ் நிலையம் அருகில் இருக்கும் டாஸ்மாக் மதுபான கடைகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.
குடிநீர் வசதி
தூத்துக்குடி அருகே உள்ள அல்லிகுளம் பஞ்சாயத்து முருகன்நகர் பகுதி மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில், நாங்கள் சுமார் 300 குடும்பங்கள் முருகன்நகர் பகுதியில் வசித்து வருகிறோம்.
எங்கள் பகுதியில் மக்களின் குடிநீர் தேவையை நிலத்தடிநீர் மூலம் பூர்த்தி செய்து வந்தோம்.
இந்த நிலையில் நிலத்தடி நீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதால் மக்களுக்கு குடிநீர் கிடைக்காமல் மிகவும் அவதிப்பட்டு வருகிறோம். மேலும் பல ஆண்டுகளாக ஊரில் ஆழ்துளை கிணறு மூலம் தண்ணீர் எடுத்து தொழிற்சாலைகளுக்கு விற்பனை செய்து வருவதால், நிலத்தடிநீர் உறிஞ்சப்பட்டு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. ஆகையால் உரிய நடவடிக்கை எடுத்து எங்களுக்கு சீரான குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூறி உள்ளனர்.