பெரியகுளத்தில் செயல்படும்தனியார் மதுபான பாரை அகற்றக்கோரி கலெக்டரிடம் பல்வேறு அமைப்பினர் மனு:மூடக்கூடாது என்றும் சிலர் மனு கொடுத்ததால் பரபரப்பு
பெரியகுளத்தில் செயல்படும் தனியார் மதுபான பாரை அகற்றக்கோரி பல்வேறு அமைப்பினர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அப்போது அந்த மதுபான பாரை மூடக்கூடாது என்றும் சிலர் மனு கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
குறைதீர்க்கும் கூட்டம்
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மொத்தம் 280 மனுக்கள் பெறப்பட்டன. அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
கூட்டத்தில் பா.ஜ.க. மாவட்ட பொதுச்செயலாளர் மலைச்சாமி தலைமையில் நிர்வாகிகள், கலெக்டரிடம் கொடுத்த மனுவில், "உப்பார்பட்டியில் உள்ள சுங்க வரி வசூல் மையத்தில் எந்தவொரு முறையான அரசு விதிமுறைகளும் பின்பற்றப்படுவது இல்லை என்று தெரிகிறது. சரக்கு வாகனம் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், சுங்கச்சாவடியை கடந்ததாக பாஸ்டாக் கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டுள்ளது. மென்பொருள் பிரச்சினை காரணம் என்று சுங்கச்சாவடி நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர். அரசு விதிகளை முறையாக பின்பற்றி, செயல்படுத்தும் வரை தற்காலிகமாக சுங்கவரி வசூலை நிறுத்தி வைக்க வேண்டும்" என்று கூறியிருந்தனர்.
மதுபான பாருக்கு எதிர்ப்பும், ஆதரவும்
இந்திய தவ்ஹீத் ஜமாத் மாநில பொதுச்செயலாளர் சித்திக் தலைமையில், வடகரை பள்ளிவாசல் தலைவர் அப்பாஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தமிழ்வாணன், எஸ்.டி.பி.ஐ. கட்சி மாவட்ட தலைவர் அபுபக்கர் சித்திக், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பெரியகுளம் தாலுகா செயலாளர் முருகன் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகள், பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் பலர் வந்தனர்.
அவர்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், "பெரியகுளம் புதிய பஸ் நிலையம் அருகே குடியிருப்பு பகுதியில் தனியார் மதுபான பார் உள்ளது. அதை அகற்றக்கோரி மக்கள் போராட்டங்கள் நடத்தி உள்ளனர். மனு கொடுத்தும் அகற்றப்படவில்லை. எனவே, மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் உள்ள மதுபான பாரை அகற்ற வேண்டும்" என்று கூறியிருந்தனர்.
இந்நிலையில், அந்த மதுபான பாருக்கு ஆதரவாக மனு கொடுக்க பெரியகுளம் பகுதியை சேர்ந்த சிலர் கலெக்டர் அலுவலகம் வந்தனர். அவர்கள் கொடுத்த மனுவில், "தென்கரையில் 3 மதுபான பார் உள்ளது. வடகரையில் இந்த ஒரு பார் தான் உள்ளது. இது மூடப்பட்டால் தென்கரைக்கு இருசக்கர வாகனத்தில் சென்று மதுகுடித்துவிட்டு வரும்போது விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. ஆனால், இந்த பார் செயல்பட்டால் நடந்து சென்று மதுகுடித்து வருவோம். இது தொடர்ந்து செயல்பட வேண்டும்" என்று கூறியிருந்தனர்.
ஒரே நேரத்தில், மதுபான பார் வேண்டாம் என்று பல்வேறு அமைப்பினரும், மதுபான பார் வேண்டும் என்று சிலரும் மனு கொடுத்த சம்பவம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.