உலகக்கோப்பை ஆக்கி போட்டி: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஒடிசா பயணம்


உலகக்கோப்பை ஆக்கி போட்டி: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஒடிசா பயணம்
x

ஒடிசாவில் நடைபெறும் உலகக்கோப்பை ஆக்கி போட்டியை காண சென்றுள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அந்த மாநில விளையாட்டு அரங்கங்களின் கட்டமைப்புகளை பார்வையிட்டார்.

சென்னை,

ஒடிசா மாநிலத்தில் நடைபெறும் 15-வது உலகக்கோப்பை (ஆண்கள்) ஆக்கி போட்டியை காணவும், அந்த மாநிலத்தில் உள்ள விளையாட்டு அரங்கங்களின் கட்டமைப்புகளை பார்வையிடவும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஒடிசா சென்றுள்ளார். உலக நாடுகளில் 16 நாடுகள் பங்கேற்கின்ற 15-வது உலக கோப்பை (ஆண்கள்) ஆக்கி போட்டி புவனேஸ்வர், ரூர்கேலா ஆகிய இடங்களில் 29-ந்தேதி வரை நடக்கிறது.

ஒடிசா சென்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை ஆக்கி இந்தியா பொருளாளர் சேகர் மனோகரன், செயல் இயக்குனர் கமாண்டர் ஸ்ரீவத்சா மற்றும் நிர்வாகிகள் புவனேஸ்வர் விமான நிலையத்தில் வரவேற்றனர்.

அப்போது ஒடிசா மாநில உணவுத்துறை மந்திரி அட்னு சபயாசச்சி நாயக், தமிழக எம்.பி. கலாநிதி வீராசாமி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் அதுல்ய மிஸ்ரா, விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் கார்த்திகேயன், ஒடிசா மாநில வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர் மதிவதனன் ஆகியோர் உடனிருந்தனர்.

பார்வையிட்டார்

தொடர்ந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புவனேஸ்வரில் உள்ள கலிங்கா விளையாட்டு அரங்கத்தில் கால்பந்து, ஆக்கி, தடகள மைதானம், நீச்சல் குளம் மற்றும் துப்பாக்கி சுடும் அரங்கம் ஆகியவற்றை பார்வையிட்டு உள் கட்டமைப்பு வசதிகள் மற்றும் பயன்பாடு குறித்து கேட்டறிந்தார்.

ஒடிசா மாநில விளையாட்டுத்துறை மந்திரி துஷார்கன்டி பெகரா, விளையாட்டுத்துறை சிறப்பு செயலாளர் வினில் கிருஷ்ணா மற்றும் ஒடிசா மாநில விளையாட்டுத்துறை அதிகாரிகளுடன் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.

ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக்கை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று சந்தித்து பேசினார்.


Next Story