உலக முதியோர் தின கொண்டாட்டம்: சென்னையில் உற்சாக ஆட்டம் போட்ட தாத்தா-பாட்டிகள்
உலக முதியோர் தினத்தையொட்டி சென்னையில் நடந்த கலைநிகழ்ச்சியில் தாத்தா-பாட்டிகள் உற்சாக ஆட்டம் போட்டு அசத்தினர்.
சென்னை,
ஒவ்வோர் ஆண்டும் உலக முதியோர் தினத்தையொட்டி ஹெல்ப் ஏஜ் இந்தியா அமைப்பு சார்பில் முதியோர் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த ஆண்டு உலக முதியோர் தினத்தையொட்டி சென்னை சேத்துப்பட்டில் முதியோர் கலை நிகழ்ச்சிகள் நேற்று நடந்தன. அமைப்பின் இயக்குனர் எட்வின் பாபு தலைமை தாங்கினார். இதில் சென்னையில் உள்ள முதியோர் மற்றும் ஆதரவற்றோர் இல்லங்களின் பிரதிநிதிகள், பொறுப்பாளர்கள் கவுரவிக்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து மூத்த குடிமக்கள் கவுரவிக்கப்பட்டனர்.
பின்னர் பல்வேறு தன்னார்வலர் அமைப்புகள் சார்பில் முதியோர் இல்லங்களுக்கு தேவையான பொருட்களும், நல உதவிகளும் வழங்கப்பட்டன.
அழகு ஜோடிகளாக...
அதைத் தொடர்ந்து முத்தாய்ப்பு நிகழ்ச்சியான ஆடல்-பாடல் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் ஒவ்வொரு இல்லத்தைச் சேர்ந்த தாத்தா-பாட்டிகள் தங்களை சீவி சிங்காரித்து அழகு ஜோடிகளாக மேடைக்கு வந்தனர். எம்.ஜி.ஆர்., சிவாஜி என காவிய பாடல்கள் தொடங்கி, ரஜினிகாந்தின் 'காவாலா...' பாடல் வரை ஆட்டம் போட்டு அசத்தினர்.
தள்ளாத வயதிலும் தடபுடலாய் ஆட்டம் போட்ட தாத்தா-பாட்டிகளை பார்த்த பார்வையாளர்கள் அசந்து போய்விட்டனர். நடன அசைவுகளை மறக்காமல் ஆடும் சிலர், பிறரைப் பார்த்து காப்பி அடித்து ஆடும் சிலர், ஒன்றுமே தெரியாமல் தெரிந்த அசைவுகளையே ஆடிய சிலர் என நடன நிகழ்ச்சிகளில் தாத்தா-பாட்டிகள் செய்த லூட்டியும் ரசிக்கச் செய்வதாகவே அமைந்தது.
சூப்பர் தாத்தா-பாட்டி
இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பள்ளி மாணவ-மாணவிகளும் கலந்துகொண்டனர். ஒவ்வொரு பாடலுக்கும் முதியோர் ஆடத் தொடங்கியது முதல் ஆட்டம் முடியும் வரை மாணவர்கள் கைதட்டி அவர்களை ஊக்கப்படுத்திக்கொண்டே இருந்தனர். இடையிடையே மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் அரங்கேறின.
அதையடுத்து 'சூப்பர் தாத்தா-சூப்பர் பாட்டி' போட்டி நடந்தது. அதுவரை குழுவாக வந்து அசத்திய முதியோர், அந்த போட்டியில் தனித்தனியே பங்கேற்றனர். பாடல், ஆடல், மாறுவேடம், பலகுரல் என பலவிதமான போட்டிகளில் 'சோலோ'வாக வந்து அவர்கள் அசத்தினர்.
இதில் டான் போஸ்கோ பியூட்டி டியூட்ஸ் இல்லத்தைச் சேர்ந்த தாமோதரன் சூப்பர் தாத்தாவாகவும், ஆனந்தம் முதியோர் இல்லத்தைச் சேர்ந்த சம்பூரணி சூப்பர் பாட்டியாகவும் வெற்றி பெற்றனர். அவர்களுக்கு சென்னை ஐகோர்ட்டு முன்னாள் நீதிபதி டி.என்.வள்ளிநாயகம் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
புதிய உற்சாகம் பிறக்கிறது
இதுகுறித்து நிகழ்ச்சியில் பங்கேற்ற தாத்தா-பாட்டிகள் கூறும்போது, 'காலம் போன கடைசியில் முதியோர் இல்லத்தில் அடைக்கலமாகி இருக்கிறோம். இதுபோன்ற நிகழ்ச்சிகள் எங்களை இன்னும் நம்பிக்கை இழக்காமல் வைத்திருக்கின்றன. ஆட்டம் பாட்டத்தில் ஈடுபட்டாலும் இன்றைய தலைமுறையினர் எங்களை பாராட்டி வாழ்த்துவதே அதிக மகிழ்ச்சி அளிக்கிறது. எங்களுக்கு புதிய உற்சாகமும் பிறக்கிறது' என்றனர்.