உலகப்புகழ் பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு முகூர்த்தக்கால் நடும் விழா - முன்னேற்பாடு பணிகள் மும்முரம்
உலகப்புகழ் பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு விழாவுக்கு முகூர்த்தக்கால் நட்டு முன்னேற்பாடு பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.
அலங்காநல்லூர்,
உலகப்புகழ் பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு விழாவுக்கு முகூர்த்தக்கால் நட்டு முன்னேற்பாடு பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.
ஜல்லிக்கட்டு திருவிழா
உலகப்புகழ் பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு திருவிழா வருகிற 16-ந் தேதி அரசு வழிகாட்டுதல்படி நடைபெற உள்ளது. ஏற்கனவே மாவட்ட கலெக்டரின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுத்தபடி பார்வையாளர்கள் அமரும் காலரி, இரண்டு அடுக்கு பாதுகாப்பு வேலி, உள்ளிட்ட ஜல்லிக்கட்டு விழா ஏற்பாடுகள் நடந்து வருகிறது. மேலும் இதையொட்டி முகூர்த்தக்கால் நடும் விழா நேற்று காலையில் வாடிவாசல் முன்பு நடைபெற்றது. பின்னர் வாடிவாசல் வர்ணம் பூசும் பணி, கேலரி அமைக்கும் பணி, வாடிவாசல் மைதானம் எந்திரம் மூலம் சுத்தம் செய்து சமப்படுத்தும்பணி உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
கண்காணிப்பு கேமராக்கள்
இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் சுமதி பாண்டியராஜன், துணை தலைவர் ராமராஜ், செயல் அலுவலர் தேவி, உதவி செயற்பொறியாளர் சுரேஷ் குமார், இளநிலை பொறியாளர் கருப்பையா மற்றும் மகாலிங்க சுவாமி மடத்து கமிட்டி தலைவர் மலைச்சாமி, செயலாளர் பிரபு, பொருளாளர் ஜோதி தங்கமணி மற்றும் மடத்து கமிட்டி நிர்வாகிகள், பேரூராட்சி பணியாளர்கள், கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக பாலமேடு ஜல்லிக்கட்டு விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மதுரை சரக டி.ஐ.ஜி. பொன்னி, மாவட்ட சூப்பிரண்டு சிவபிரசாத், துணை சூப்பிரண்டு பாலசுந்தரம், இன்ஸ்பெக்டர் சங்கர் கண்ணன் மற்றும் போலீசார் ஆய்வு செய்தனர்.
அதன்படி மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்கள் பதிவு செய்யப்படும் இடம், காளைகள் வரிசைப்படுத்தும் பகுதி, மாடுபிடி வீரர்கள் அமரும் பகுதி உள்ளிட பல இடங்களையும் ஆய்வு செய்தனர். மேலும் இம்முறை கூடுதலாக கண்காணிப்பு கேமராக்கள் அமைத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்படும் என தெரிவித்தனர்.