உலக புகையிலை இல்லா தின விழிப்புணர்வு பேரணி
உலக புகையிலை இல்லா தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
புகைபிடிப்பதால் ஏற்படும் தீமைகளை வலியுறுத்துவதுடன், அது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த ஆண்டுதோறும் உலக புகையிலை இல்லா தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. அதன்படி அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்தில் விழிப்புணர்வு பேரணி திருமானூர் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வகீல் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட புகையிலை தடுப்பு திட்ட சமூக பணியாளர் வைஷ்ணவி மற்றும் குழுவினர் ஏலாக்குறிச்சி மற்றும் சுள்ளங்குடி ஆரம்ப சுகாதார நிலையங்களில் பொது சுகாதாரத்துறை மூலம் பேரணி மேற்கொண்டு புகையிலையை பயன்படுத்துவதால் உண்டாகும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு வழங்கினார்கள். மேலும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்ட பணியாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு வழங்கப்பட்டு புகையிலை இல்லா தின உறுதிமொழி எடுக்கப்பட்டது.
புகையிலை பொருட்களால் கருவுற்ற பெண்களுக்கு புற்று நோய், கருச்சிதைவு, ஊட்டச்சத்து குறைபாடு போன்ற பாதிப்புகளும், கருவிலுள்ள குழந்தைக்கு பிறவி ஊனம், மூளை வளர்ச்சி குன்றுதல், நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு போன்ற கொடிய பாதிப்புகள் ஏற்படும் என எடுத்துக்கூறப்பட்டது. மேலும், புகையிலை பழக்கத்திலிருந்து விடுபட நினைப்பவர்கள் தங்கள் பகுதியின் சுகாதார பணியாளர்களை அணுகினால், மாவட்ட புகையிலை தடுப்பு மையம் மூலம் இலவச ஆலோசனை மற்றும் சிகிச்சை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. விழிப்புணர்வு பேரணியில் ஊராட்சி மன்ற தலைவர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.