உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு வாகனம்
கடலூரில் உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் பாலசுப்பிரமணியம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
கடலூர்
மக்கள் தொகை தினம்
உலக மக்கள் தொகை தினத்தினை முன்னிட்டு கடலூர் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் மாவட்ட குடும்ப நல செயலகத்தின் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதற்கு மருத்துவ பணிகள் இணை இயக்குனர் ரமேஷ்பாபு தலைமை தாங்கினார். அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் சாய்லீலா முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் கலந்து கொண்டு விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதில் அரசு மருத்துவமனை செவிலியர்கள் பலர் கலந்து கொண்டு கடலூர்-நெல்லிக்குப்பம் சாலை வழியாக பேரணியாக சென்று வந்தனர். இதையடுத்து உலக மக்கள் தொகை தினத்தையொட்டி ஆண்கள் மற்றும் பெண்களுக்கான நிரந்தர, தற்காலிக குடும்பநல முறைகள் பற்றியும், மக்கள் தொகை பெருக்கத்தினை கட்டுப்படுத்துதல் குறித்தும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டிருந்த விழிப்புணர்வு வாகனத்தையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த வாகனம் மூலம் வருகிற 24-ந் தேதி வரை அனைத்து பகுதிகளிலும் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட உள்ளது.
விழிப்புணர்வு கருத்தரங்கம்
மேலும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் 7 நாட்கள் சிறப்பு குடும்ப நல அறுவை சிகிச்சை மற்றும் குடும்பநல சிகிச்சை முறைகள் நடைமுறைபடுத்தப்பட உள்ளது.அதனை தொடர்ந்து அரசு தலைமை மருத்துவமனை கூட்டரங்கில் உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் மக்கள் தொகை பெருக்கத்தினை கட்டுப்படுத்துதல் குறித்த 'குடும்ப கட்டுப்பாடு முறைகளை ஏற்போம்- நம் முன்னேற்றத்தில் புதிய அத்தியாயம் படைப்போம் " என்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட கலெக்டர் தலைமையில் அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
பேச்சுப் போட்டி
பின்னர் உலக மக்கள் தொகை தினத்தையொட்டி நடத்தப்பட்ட பேச்சுப்போட்டியில் வெற்றிபெற்ற மருத்துவக் கல்லூரி மற்றும் அரசு செவிலியர் கல்லூரி, அரசு செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகளுக்கு பரிசு வழங்கிய கலெக்டர், பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்கும் வகையில் அனைவருக்கும் மஞ்சப்பை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதில் அரசு மருத்துவமனை டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.