உலக சாதனை படைத்த சட்டக்கல்லூரி மாணவர்


உலக சாதனை படைத்த சட்டக்கல்லூரி மாணவர்
x
தினத்தந்தி 8 July 2023 1:06 AM IST (Updated: 9 July 2023 5:25 PM IST)
t-max-icont-min-icon

உலக சாதனை படைத்த சட்டக்கல்லூரி மாணவரை மற்றவர்கள் பாராட்டி வருகின்றனர்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, கல்லை கிராமம் முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன். கூலித்தொழிலாளி. இவரது மகன் மாதேஸ்வரன் (வயது 22). இவர் சென்னை புதுப்பாக்கத்தில் உள்ள டாக்டர் அம்பேத்கர் அரசு சட்ட கல்லூரியில் பி.ஏ. எல்.எல்.பி. இறுதி ஆண்டு படித்து வருகிறார். ேமலும் இவர் தட்டச்சில் தமிழ், ஆங்கிலம் மொழிகளில் ஜூனியர், சீனியர் கிரேடுகள் மற்றும் உயர்வேகம் முடித்துள்ளார்.

கடந்த 2021-ம் ஆண்டு மாதேஸ்வரன் ஏ 4 காகிதத்தில் முதலில் இந்திய வரைபடத்தை வரைந்து, அதனை தட்டச்சு எந்திரத்தில் வைத்து இந்தியா என ஆங்கில எழுத்துகளில் தட்டச்சு செய்தார். பின்னர் அவர் ஏ 4 தாளில் கடவுள்களின் உருவங்கள், சுதந்திர போராட்ட தியாகிகள், அரசியல் தலைவர்கள், நடிகர்கள் உள்ளிட்டவர்களின் உருவங்களை, ஆங்கிலத்தில் அவர்களது பெயர்கள் மூலம் தட்டச்சு செய்து படமாக வரைந்துள்ளார். தட்டச்சு செய்து வரைந்த அரசியல் தலைவர்களின் உருவப்படங்களை அவர்களிடம் நேரில் காண்பித்து அவர் வாழ்த்து பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து அவர் தட்டச்சு எந்திரத்தில் மொத்தம் 324 ஏ 4 தாள்களில் அம்பேத்கர் என்ற பெயரை ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து 17.8 அடி நீளம், 12.5 அடி அகலம் என்ற அளவில் சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் மார்பளவு உருவத்தை வரைந்து உலக சாதனை படைத்தார். இந்த சாதனையை புதுடெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சர்வதேச சாதனை புத்தகம் என்ற நிறுவனம், சாதனை புத்தகத்தில் இடம் பெறச்செய்து மாதேஸ்வரனுக்கு தங்கப்பதக்கமும், பாராட்டு சான்றிதழையும் வழங்கி பாராட்டியுள்ளது.

தமிழகத்தில் தட்டச்சு மூலம் ஓவியம் வரையும் முதல் நபர் என்ற பெருமையை மாதேஸ்வரன் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரை அனைத்து தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.


Next Story